பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தின் சாகரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 AUG 2023 6:05PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜெய்!

இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு வீரேந்திர காதிக் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே மற்றும் திரு பிரகலாத் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே,  எனது அன்பான சகோதர சகோதரிகளே!

இன்று சாகரில் ஒரு நல்லிணக்கக் கடலைக் காணலாம். நாட்டின் இந்த பகிரப்பட்ட கலாச்சாரத்தை மேலும் வளப்படுத்த, இன்று இங்கு சந்த் ரவிதாஸ் நினைவகம் மற்றும் கலை அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு முனிவர்களின் அருளால், இந்தப் புனித நினைவுச்சின்னத்திற்கான பூமி பூஜை செய்ய எனக்கு  வாய்ப்பு கிடைத்தது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. மதிப்பிற்குரிய சந்த் ரவிதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன், இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளதால், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலும் கட்டப்படும் என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும். எனவே திறப்பு விழாவுக்கும் கண்டிப்பாக வருவேன்.

சகோதர, சகோதரிகளே,

சந்த் ரவிதாஸ் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தில் கம்பீரமும் தெய்வீகமும் இருக்கும். இந்த தெய்வீகத்தன்மை இன்று இந்த நினைவுச்சின்னத்தின் அடித்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரவிதாஸ் அவர்களின் போதனைகளிலிருந்து வெளிப்படும். 20,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட நதிகளின் மண், நல்லிணக்க உணர்வால் நிரப்பப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஒரு கைப்பிடி மண்ணுடன், இந்த மாநிலத்தின் லட்சக்கணக்கான குடும்பங்களும் 'சம்ரஸ்தா போஜ்' க்கு ஒரு கைப்பிடி தானியங்களை அனுப்பியுள்ளன. இதற்காக நடந்து வந்த 5 சம்ரஸ்தா யாத்திரைகளும் இன்று சாகரில் நிறைவடைந்தன. இந்த சம்ரஸ்தா யாத்திரைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை, மாறாக, சமூக நல்லிணக்கத்தின் ஒரு புதிய சகாப்தம் இங்கிருந்து தொடங்கியுள்ளது என்று நான் நம்புகிறேன். இந்தப் பணிக்காக மத்தியப் பிரதேச அரசை நான் பாராட்டுகிறேன், முதல்வர் சிவராஜ் அவர்களையும் உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்!

நண்பர்களே,

உத்வேகமும், முன்னேற்றமும் ஒன்றிணையும் போது, அது ஒரு புதிய சகாப்தத்திற்கு அடித்தளமிடுகிறது. அதன்படி, கோட்டா- பினா பிரிவில் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு முக்கிய வழித்தடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்கள் சாகர் மற்றும் அருகிலுள்ள பகுதி மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும். இதற்காக இங்குள்ள அனைத்து சகோதர, சகோதரிகளையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்த் ரவிதாஸ் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்போது அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் நம் முன் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் நம் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் நமது பொறுப்பு. ஒரு தேசமாக, நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இவ்வளவு நீண்ட காலத்தில் சமூகத்தில் சில தீய சக்திகள் ஊடுருவுவதும் இயல்புதான். இந்த தீய சக்திகளை தோற்கடிக்க இந்திய சமூகத்தின் சக்தியால் தான் இயலும். இந்த சமூகத்தில் அவ்வப்போது சில மகான்களும், ஞானிகளும் உருவாகி வருகின்றனர். ரவிதாஸ் அவர்கள் அவ்வளவு பெரிய மகான். நாட்டை முகலாயர்கள் ஆண்ட காலத்தில் பிறந்தவர். நிலையற்ற தன்மை, அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை ஆகியவற்றால் சமூகம் திணறிக்கொண்டிருந்தது. அப்போதும் ரவிதாஸ் அவர்கள் சமூகத்தை விழிப்படையச் செய்தார்; சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராட அவர் கற்றுக்கொடுத்தார். ஒருவகையில் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராட சமூகத்தை அவர் ஊக்குவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்த உத்வேகத்துடன் ஹிந்தவி சுயராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தார். இதே உணர்வு சுதந்திரப் போராட்டத்தின் போது லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் இதயங்களில் இருந்தது. அந்த உத்வேகத்துடன்தான் இன்று அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

இன்று, ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா' மூலம், நாட்டை வறுமை மற்றும் பசியிலிருந்து விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கொரோனா போன்ற மிக மோசமான தொற்றுநோய்களில் ஒன்றை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த உலகின் அமைப்புகளும் சீர்குலைந்து விட்டன. உலகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. இந்தியாவில் உள்ள ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் குறித்து அனைவரும் கவலை தெரிவித்தனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நெருக்கடி உலகைத் தாக்கியதாகச் சொல்லப்பட்டது. சமூகத்தின் இந்த பிரிவினர் எப்படி வாழப் போகிறார்கள்? ஆனால், என்ன வந்தாலும், என் ஏழை சகோதர, சகோதரிகளை வெறும் வயிற்றில் தூங்க விடமாட்டேன் என்று முடிவு செய்தேன். நண்பர்களே, பசியின் வலி எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஏழைக்கு சுயமரியாதை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். உங்கள் வலியையும் துயரத்தையும் புரிந்துகொள்ளவும், உணரவும் நான் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை. அதனால்தான் பிரதமரின் ஏழைகளுக்கான நல உணவுத் திட்டத்தைத்  தொடங்கினோம். 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் உறுதி செய்யப்பட்டது. இன்று, நமது முயற்சிகள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன.

நண்பர்களே,

இன்று, நாட்டில் ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து முக்கியத் திட்டங்களும் பெரும்பாலும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்திற்கு பயனளிக்கின்றன. முந்தைய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தேர்தல் காலங்களுக்கு ஏற்ப இருந்ததை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். ஆனால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடிகள் மற்றும் பெண்களுக்கு நாடு துணை நிற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். பிரசவத்தின் போது, தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். பிறந்த குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பிற்காக இன்று இந்திரதனுஷ் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து நோய்களுக்கும் எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது. கடந்த ஆண்டுகளில் 5.5 கோடிக்கும் அதிகமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இன்று நாட்டின் 7 கோடி சகோதர, சகோதரிகளை அரிவாள் செல் இரத்த சோகையிலிருந்து விடுவிக்க ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிகிச்சை தேவைப்பட்டால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியம். இன்று நாட்டில் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக நல்ல பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. பழங்குடியினர் பகுதிகளில் 700 ஏகலைவா உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு கல்விக்கான புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளை அரசு வழங்குகிறது. குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கும் வகையில் மதிய உணவு முறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மகள்களும் சமமாக முன்னேற வேண்டும் என்பதற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்குப் பிறகு உயர்கல்வி பயில தனி உதவித் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் தற்சார்பு அடையவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் முத்ரா கடன்கள் போன்ற திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலானோர், பட்டியலின- பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  சகோதர, சகோதரிகளாவர். மேலும் அனைத்து பணமும் வங்கி உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்படுகிறது.

நண்பர்களே,

பட்டியல் பழங்குடியின மக்களை மனதில் வைத்து, ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தையும் துவக்கினோம். இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ரூ.8,000 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நமது பழங்குடி சகோதர சகோதரிகள் பலர் வனச் செல்வத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களுக்காக வன் தன் யோஜனா திட்டத்தை நாடு செயல்படுத்தி வருகிறது. இன்று சுமார் 90 வனப் பொருட்கள் எம்.எஸ்.பி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தலித், ஒடுக்கப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் வீடு இல்லாமல் இருக்கக்கூடாது, ஒவ்வொரு ஏழைக்கும் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த மக்கள் இன்று பொருளாதார ரீதியாக சுதந்திரமாகி வருகின்றனர். சமூகத்தில் அவர்களுக்கு உரிய, சமமான இடம் கிடைத்து வருகிறது.

நண்பர்களே,

சமூகத்தின் இந்தப் பிரிவு மக்கள் பலவீனமானவர்கள் அல்ல, அவர்களின் வரலாறு பலவீனமானது அல்ல. சமூகத்தின் இந்தப் பிரிவுகளில் இருந்து பல சிறந்த ஆளுமைகள் உருவாகியுள்ளனர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் அசாதாரணமான பங்கைக் கொண்டுள்ளனர். அதனால்தான், இன்று நாடு அவர்களின் பாரம்பரியத்தையும் பெருமையுடன் பாதுகாத்து வருகிறது. வாரணாசியில் உள்ள சந்த் ரவிதாஸ் பிறந்த இடத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.  பாபா சாகேப் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களை பஞ்ச தீர்த்தமாக உருவாக்கும் பணியையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அதேபோல், பழங்குடியின சமூகத்தின் பெருமைமிக்க வரலாற்றை அழியாததாக்கும் வகையில் இன்று நாட்டின் பல மாநிலங்களில் அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடும் பாரம்பரியத்தை நாடு தொடங்கியுள்ளது. இன்று, நாட்டிலேயே முதல் முறையாக, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பாரம்பரியங்கள் தங்களுக்குரிய மதிப்பையும், மரியாதையையும் பெறுகின்றன.  நாடு மேற்கொண்ட இந்தப் பயணத்தில், சந்த் ரவிதாஸ் அவர்களின் போதனைகள்  நாட்டு மக்கள் அனைவரையும் தொடர்ந்து ஒன்றிணைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒன்றிணைந்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். இந்த உணர்வோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

----

ANU/SRI/BR/KPG

 



(Release ID: 1953709) Visitor Counter : 106