வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்தியவர்த்தக அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சர்திரு டேமியன் ஓ' கானருக்கு இடையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பு தொடர்பானகூட்டறிக்கை

Posted On: 29 AUG 2023 2:33PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் திரு டேமியன் ஓ'கானர் ஆகியோர் புதுதில்லியில் நேற்று (28-08-2023) இருதரப்பு சந்திப்பை நடத்தினர். 22 மே 2023 அன்று போர்ட் மோர்ஸ்பியில் இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான சிறந்த சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு, பரந்த அடிப்படையிலான உறவை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்தது.

நியூசிலாந்தும் இந்தியாவும் மக்களுக்கு இடையே வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன; இவை வணிகம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் விரிவடைந்துள்ளன. நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி  சமூகத்தினர் அந்நாட்டுக்கு வலுவான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த இணைப்புகள் நமது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.

இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பில் வலுவான முன்னேற்றம் இருப்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இதை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இது தொடர்பாக வழக்கமான அடிப்படையில் இருதரப்பு சந்தப்பை நடத்த அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது என முடிவு செய்த அமைச்சர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனர்:

•     பொருளாதார கூட்டு செயல்பாட்டுக்கான புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல்.

•     பரஸ்பர நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தின் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்

•     இரு நாடுகளின் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்தல்

இருதரப்பு தொழில்துறைகளுடன் நடத்தப்பட்ட கூட்டு ஆலோசனைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களின் அடிப்படையில் பணிக்குழுக்களை அமைப்பதற்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமைச்சர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் இருந்து மரக்கட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான முயற்சிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தனர். சமீபத்தில் நியூசிலாந்துக்கு இந்திய மாம்பழ ஏற்றுமதி தொடங்கப்பட்டதை அமைச்சர்கள் வரவேற்றனர்.

நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) முறை தொடர்பாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) மற்றும் பேமெண்ட்ஸ் நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை அமைச்சர்கள் வரவேற்றனர்.

விநியோகச் சங்கிலிகள், தூய்மைப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பை அமைச்சர்கள் அங்கீகரித்தனர்.

பணிக்குழுக்களின் முன்னேற்றம் மற்றும் அதன் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுஆய்வு செய்வது என அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

***



(Release ID: 1953243) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi