கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் மறுஆய்வு மாநாட்டிற்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது
Posted On:
17 AUG 2023 5:28PM by PIB Chennai
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் மறுஆய்வு குறித்த கருத்தரங்கை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் இன்று விஞ்ஞான் பவனில் நடத்தியது. இந்த மறுஆய்வு, பொதுத்துறை நிறுவனங்களின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செயல்திறனை மதிப்பிடுவதற்கான அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த மாநாட்டில் கனரக தொழில்துறை இணை அமைச்சர் திரு கிருஷன்பால் குர்ஜார், அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சி.எம்.டி.க்கள் மற்றும் கனரக தொழில் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, "நமது பொதுத்துறை நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான கருவியாக வருடாந்திர செயல்திறன் மறுஆய்வு உள்ளது என்று கூறினார். இந்த நிறுவனங்கள் திறம்படவும், திறமையாகவும் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த எங்களது கடமை என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த மதிப்பாய்வு அவற்றின் செயல்திறன் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதாக அவர் கூறினார்.
பொறியியல் மற்றும் வாகன உற்பத்தித் துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுகளை நனவாக்கும் பொறுப்பு கனரக தொழில்துறை அமைச்சகத்திற்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியா இன்று உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். அடுத்த சில ஆண்டுகளில் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இந்த இலக்கை நோக்கி கனரக தொழில்கள் பெரும் பங்கு வகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கனரக தொழில்துறை அமைச்சகத்தின் பணிப் பகுதி முக்கியமாக வாகனத் துறை, பொறியியல், கனரக மின் மற்றும் மூலதன பொருட்கள் துறைகளை உள்ளடக்கியது. கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது வீட்டுக்கு உபயோகமான உப்பு, தேயிலை, கடிகாரங்கள், சிமெண்ட், காகிதம் தயாரித்தல் முதல் உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை பரந்த வேலைத் துறையாகும்.
இந்நிகழ்ச்சியின் போது, கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சி.எம்.டி.க்கள் 'புரிந்துணர்வு ஒப்பந்த செயல்திறன் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி' குறித்து விளக்கமளித்தனர்.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1949953)
Visitor Counter : 108