பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிபொருட்கள் விற்பனை அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2023 4:15PM by PIB Chennai
பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு, 2022-23-ம் நிதியாண்டில் சுமார் 223 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், 10 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அதிகரித்து, அதனால் வாகனங்களின் மொத்த விற்பனையும் அதிகரித்துள்ளது. இவை போக்குவரத்து, எரிசக்தி மற்றும் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்க வழிவகுத்தது.
நவம்பர் 2021 மற்றும் மே 2022 ஆகிய காலகட்டங்களில் இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 என்ற அளவில் மத்திய அரசு குறைத்துள்ளது. கலால் வரி குறைப்பின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டன, இதன் விளைவாக சில்லறை விலைகள் வீழ்ச்சியடைந்தன. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிப்பதையும், நுகர்வை அதிகரிப்பதையும், பணவீக்கத்தை குறைவாக வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் விகிதங்களைக் குறைத்துள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எரிசக்தி செயல்திறன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், தேவை அதிகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுதல், உயிரி எரிபொருள்கள், பிற மாற்று எரிபொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், மின்சார வாகன சார்ஜிங் வசதிகள் போன்றவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், எத்தனால், பயோ-டீசல், பயோ-சி.என்.ஜி போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேசிய உயிரி எரிபொருள் கொள்கை, 2018-ஐ அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தகவலை மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/PLM/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1946507)
வருகையாளர் எண்ணிக்கை : 248