அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மின்னணுக் கழிவுகள், ஆபரணக் கழிவுகள் மற்றும் மோட்டார்வாகன வினையூக்கிக் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்பதற்கு ஒருங்கிணைந்த ஆலையை உருவாக்குவதற்காக குஜராத்தில் உள்ள அல்கெமி ரீசைக்ளர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு டி.டி.பி-டி.எஸ்.டி ஆதரவு அளித்துள்ளது
Posted On:
07 AUG 2023 2:46PM by PIB Chennai
"குப்பையில்லா நகரங்களை நோக்கி தொழில்நுட்பத் தலையீடு"என்ற முன்முயற்சியின் கீழ் இரண்டாவது ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டி.டி.பி) இன்று கையெழுத்திட்டது. மின்னணுக் கழிவுகள், ஆபரணக் கழிவுகள் மற்றும் ஆட்டோமொபைல் வினையூக்கிக் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்பதற்கு ஒருங்கிணைந்த ஆலையை உருவாக்குவதற்காக குஜராத்தின் அல்கெமி ரீசைக்ளர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் டி.டி.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1.90 கோடியில் ரூ.1.14 கோடி நிதியுதவி வழங்க வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப தலையீட்டு அழைப்பு இந்திய நகரங்களில் இருந்து கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி, கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்க தொழில்நுட்பத் தலையீடுகளைப் பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, தூய்மை இந்தியா இயக்கம்: நகர்ப்புறம் 2.0, அனைத்து நகரங்களையும் குப்பையில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; தூய்மையை வலியுறுத்துகிறது.தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.) யின் சட்டப்பூர்வ அமைப்பு) கழிவு மேலாண்மை துறையில் வணிகமயமாக்கல் கட்டத்தில் புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்திய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியது.
இவ்வகையில் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை பதப்படுத்துவதற்கான புதுமையான முறையைப் பயன்படுத்தி மீட்டெடுப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த ஆலையை அல்கெமி ரீசைக்ளர்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மின்னணுக் கழிவுகள், ஆபரணக் கழிவுகள் மோட்டார்வாகன வினையூக்கிக் கழிவுகள் ஆகியவற்றை ஒரு தனித்துவமான முறையில் கலக்கும்போது, மீட்பு விகிதம் கணிசமாக உயரும். தங்கம், வெள்ளி, பல்லேடியம், பிளாட்டினம், ரோடியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை இந்த மூன்று கழிவுகளின் கலவையிலிருந்து 750 டிபிஏ நிறுவப்பட்ட திறனில் மீட்டெடுக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது .
இந்த புதுமையான முறை விலைமதிப்பற்ற உலோகங்களின் மீட்பு விகிதத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கழிவு மேலாண்மைக்கு ஒரு நிலையான தீர்வையும் வழங்குகிறது. இந்த மூன்று வகையான கழிவுகளிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களை திறம்பட பிரித்தெடுப்பதன் மூலம், பாரம்பரிய சுரங்க நடைமுறைகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் தாக்கம் குறைகிறது. இது செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையாக அமைகிறது.
******
ANU/SM/SMB/KPG
(Release ID: 1946482)
Visitor Counter : 125