உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு உருவாக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை சிவில் விமானப்போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் ஏற்றுக்கொண்டுள்ளது

Posted On: 24 JUL 2023 2:51PM by PIB Chennai

நிலையான விமானப் போக்குவரத்து நடைமுறைகளை ஊக்குவிக்கவும், விமானத் துறையிலிருந்து பசுமைக்குடில்  வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் வருமாறு:

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) உருவாக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை சிவில் விமானப்போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) அதன் தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் (எஸ்.ஏ.ஆர்.பி) மூலம் ஏற்றுக்கொண்டு சிவில் விமான ஒழுங்குமுறைகள் (சி.ஏ.ஆர்) வடிவில் வெளியிட்டுள்ளது.

தூய்மை எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நாட்டில் உயரி-விமான எரிபொருள்  (ஏடிஎஃப்)   திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (எம்ஓபி & என்ஜி) ஒரு திட்டக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் விதிமுறைகளில், மூலப்பொருட்கள் உற்பத்தி/ தேவை, தொழில்நுட்பம், இந்தியத் தரநிர்ணய அமைவனத்தின்  தரநிலைகள், என்ஜின் செயல்திறன் மீதான விளைவுகள் போன்றவை அடங்கும். இக்குழு தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் விமான நிலையத் திட்டங்களுக்கான எரிசக்திப் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தரவு வெளியீடு போன்ற முன்முயற்சிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்குப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக பயிற்சித் தொகுப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய விமானப்படையுடன் கலந்தாலோசித்து, விண்வெளிப்  பயன்பாட்டை மேம்படுத்தியுள்ளது, இதன்விளைவாகக்  கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக இணையமைச்சர் திரு  வி.கே.சிங் (ஓய்வு) இன்று மாநிலங்களவையில் கேள்விஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

ANU/SMB/AG


(Release ID: 1942177) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Telugu