சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரியில் மத்திய அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்த திருமதி நிர்மலா சீதாராமன் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்திலும் பங்கேற்றார்
Posted On:
07 JUL 2023 7:59PM by PIB Chennai
புதுச்சேரியில் மத்திய அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் குறித்து இன்று (07.07.2023) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி அரசு, நிதிச்சேவைகள் துறை, வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் உதவியுடன் மத்திய நிதியமைச்சர் முன்முயற்சியில் புதுச்சேரியில் 2023 பிப்ரவரியில் திட்டங்கள் அமலாக்க தீவிர இயக்கம் தொடங்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த யூனியன் பிரதேசத்தில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசின் சிறப்புத் திட்டங்கள் அதிகபட்சம் மக்களை சென்றடைய வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
நித்தி ஆயோக், நிதிச்சேவைகள் துறை, புதுச்சேரி அரசு உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு பங்கேற்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த இயக்கத்திற்கான நடைமுறை அம்சங்கள் உருவாக்கப்பட்டன.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அனைவரையும் உள்ளடக்கிய நிதித்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவிலான பிற திட்டங்களின் சிறப்பான அமலாக்கத்திற்கு திருமதி சீதாராமனின் அழைப்புக்குபின், புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்தும் இதன் காரணமாக யூனியன் பிரதேசங்களுக்கிடையே புதுச்சேரியின் தரவரிசை உயர்ந்திருப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர இயக்கத்தால் பல அம்சங்களில் புதுச்சேரி தேசிய சராசரியைவிட, சிறந்து விளங்குகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தில் 2023, பிப்ரவரியில் 1776-ஆக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 54 சதவீதம் அதிகரித்து 2740-ஆக உள்ளது. இந்தத் திட்டத்தின் தரவரிசையில் யூனியன் பிரதேசங்களுக்கிடையே புதுச்சேரி மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிரதமரின் ஜீவன்ஜோதி பீமாத் திட்டத்தில் கடந்த பிப்ரவரியில் 1.27 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 1.40 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனாவில் தேசிய சராசரியான 25,034 என்பதை விஞ்சி புதுச்சேரியில் 26,148 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் 2.98 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 3.36 லட்சமாக உள்ளது.
பிரதமரின் சுகன்யா சம்ருதித் திட்டத்தில் கடந்த பிப்ரவரியில் 61,983-ஆக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்போது 87,000-ஆக உள்ளது.
வேளாண் கடன் அட்டைத் திட்டத்தில் கடந்த பிப்ரவரியில் 15,140-ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 17,300-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மீன்வளத்துறை பயனாளிகள் 4,119 பேர். கால்நடை பராமரிப்புத்துறை பயனாளிகள் 4,036 பேர்.
பிரதமரின் ஷ்ரம் யோகி மந்தன் திட்டத்தில் 2023-பிப்ரவரியில் 2336-ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை சிறப்பு இயக்கத்தின் காரணமாக இரு மடங்காகி தற்போது 4,900-ஐ நெருங்கியுள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2023,பிப்ரவரிக்கு பின் 1145 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 83,713 கடன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான சராசரியில் 5 மடங்கு அதிகமாகும்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10,000 சமையல் எரிவாயு இணைப்புகள் என்ற இலக்கு விஞ்சப்பட்டு, 30.06.2023 நிலவரப்படி 15,556 பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு திட்டங்களின் பரவலாக்க இயக்கத்திற்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்டத்தின் கீழ் 6,624 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 78, 453 பயனாளிகள் என்ற நிலையில், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் 6.34 லட்சம் பயனாளிகள் உள்ளனர்.
பிரதமரின் கரம் யோகி மந்தன் திட்டத்தின் கீழ், 30.06.2023 நிலவரப்படி, 196 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 33 கணக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா ஊரக இயக்கம் 2.0 கீழ், புதுச்சேரியில் உள்ள 108 கிராமங்களும் திறந்த வெளியில் காலைக்கடன் கழிக்காதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 கீழ், அனைத்து நகராட்சிகளும் திறந்த வெளியில் காலைக்கடன் கழிக்காதவையாக சான்றளிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 1800-க்கும் அதிகமான சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தை செயல்படுத்துவதில் யூனியன் பிரதேசங்களின் தரவரிசையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் 2022-ல் 28,627-ஆக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 30.06.2023 நிலவரப்படி, 33,250-ஆக அதிகரித்துள்ளது.
பொலிவுறு நகர இயக்கத்தில் ரூ.930 கோடி மதிப்பில் 133 திட்டங்கள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.602 கோடி மதிப்பிலான திட்டங்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
அம்ருத் 1.0 திட்டத்தில் புதுச்சேரிக்கு அனுமதிக்கப்பட்ட 23 திட்டங்களில் 20 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய மூன்று திட்டங்கள் 2023 செப்டம்பர் வாக்கில் நிறைவடையும்.
புதுச்சேரியில் பொதுமக்களுக்குக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
மத்திய அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் குறித்த ஆய்வுக்குப் பின், திருமதி நிர்மலா சீதாராமன் லால்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பொதுமக்களுக்குக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ், பல வங்கிகளிடமிருந்து அனுமதிக் கடிதங்களைப் பயனாளிகள் பெற்றுக்கொண்டனர்.
முத்ரா, ஸ்டாண்ட் அப், சுயஉதவிக் குழுக்கள், பிரதமரின் ஸ்வநிதி, பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம், மற்றபிற கடன்கள் திட்டம் ஆகியவற்றின் கீழ், 1.41 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,628.38 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடன் கணக்குகள், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் ஆகியவற்றுக்கானவை.
இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கி ஆதரவில் வீராம்பட்டினம், அரியாங்குப்பம், திருமலைராயன்பட்டினம் ஆகிய பகுதிகளின் குடிநீர் விநியோகத்திற்கு ரூ.49.58கோடிக்கான அனுமதி கடிதங்களை திருமதி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதேபோல், நபார்டு வங்கியின் துணை நிறுவனமான நாப்கிசான் மூலம் காரைக்கால் மருதம் வேளாண் உற்பத்தி அமைப்பு மற்றும் திருகாமேஸ்வரர் உயர்தொழில்நுட்ப வேளாண் உற்பத்தி அமைப்பு ஆகியவற்றுக்கு ரூ. 50 லட்சத்திற்கான அனுமதி கடிதங்களையும் அமைச்சர் வழங்கினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த பெருநிறுவன சமூகப்பொறுப்பு முன்முயற்சியின் கீழ், இந்தியன் வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 10.25 லட்சத்திற்கான காசோலையை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு நிதியமைச்சர் வழங்கினார்.
மேலும் இதே திட்டத்தின் கீழ், இந்தியன் வங்கி வழங்கிய மதிய உணவு வாகனம் ஒன்றையும், அட்சயபாத்திர அறக்கட்டளையிடம் திருமதி சீதாராமன் ஒப்படைத்தார்.
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுடன் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் செல்வகணபதி, புதுச்சேரி யூனியன் பிரதேச அமைச்சர்கள் திருமதி எஸ் சந்திர பிரியங்கா, திரு கே. லட்சுமிநாராயணன், திரு ஏ நமசிவாயம், திரு சி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினகள் திரு பி எம் எல் கல்யாணசுந்தரம், சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திரு சிவசுப்பரமணியன் ராமன் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
***

SM/SMB/RS/GK
(Release ID: 1938028)