சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
Posted On:
21 JUN 2023 7:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல் முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் அது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் தான் என்று குறிப்பிட்டார். இன்று அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நாம் யோகாவை கடைபிடித்து வருகிறோம், இது யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பொருள்படக் கூடிய வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். யோகா என்பது நமது நாட்டின் பெருமிதம் என்றும், நமது நாட்டிற்கு புகழ் சேர்க்கக் கூடிய இயக்கமாக அது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
யோகாசனங்கள் மூலமாக நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொள்ள இயலும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் யோகாவை கடைபிடித்து அன்றாட வாழ்வில் உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆரோக்கியமான குடிமக்கள், வலுவான தேசத்திற்கு வழி வகுக்கிறார்கள் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
போர்ட் ப்ளேரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆயுஷ் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் 42 இடங்களி்ல் யோகா தினக் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து போர்ட் ப்ளேரில் உள்ள தொழில்துறை பிரதிநிதிகளை டாக்டர் எல் முருகன் சந்தித்துப் பேசினார். இந்த தீவுப் பகுதியில் வர்த்தகத்துறையின் வளர்ச்சிக் குறித்து அவர்கள், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டதோடு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
மத்திய அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அரசின் சாதனைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு முன்னேறிச் செல்வதாக அமைச்சர் அப்போது கூறினார். வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு மட்டுமானது அல்ல என்றும், தொலைதூரப் பகுதிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் அளித்து வருவதாக கூறிய அமைச்சர், இந்த தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் சாட்சிகளாக அமைந்துள்ளன என்றார்.
மாவட்ட அளவிலான மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அதன் பணிகள் முடிவடைந்து மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலைய முனையம் இங்கே சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற வளர்ச்சிப் பணிகள் தென்கிழக்கு நாடுகளுடன் சமூக பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, உள்ளூர் மீனவர்களை சுவராஜ்தீப்பில் (ஹேவ்லாக்) சந்தித்த அமைச்சர், அந்தப் பகுதியில், பனிக்கட்டி தொழிற்சாலையை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகள் கொண்ட சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.
***
SM/IR/KPG/KRS
(Release ID: 1934234)
Visitor Counter : 88