அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குறைந்த வடுக்கள் கொண்ட தோல் காயங்களை குணப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட திசு இணைப்பு சாதனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல்
Posted On:
13 JUN 2023 1:34PM by PIB Chennai
பாலூட்டிகளின் உறுப்புகளில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருவகை திசு மருந்து, குறைந்த செலவில் தோல் காயங்களை மிகக் குறைந்த தழும்புகளுடன் விரைவாக குணப்படுத்தும் உயிரியல் மருத்துவ சாதனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரச்சான்றிதழுக்கு தேவையான அனைத்து சட்டபூர்வ அம்சங்களையும் கொண்டுள்ளதால், ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அனைத்து சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யும் டி வகுப்பு மருத்துவ சாதனங்களை உருவாக்கிய நாட்டின் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
விலங்குகளிலிருந்து எடுக்கும் பொருட்களை மேம்பட்ட காயம் பராமரிப்புப் பொருட்களாகப் பயன்படுத்துவது புதியதல்ல. ஆனால், மருந்துக் கட்டுப்பாட்டாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான தயாரிப்புகளைத் தயாரிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பம் இதுவரை கிடைக்காமல் இருந்தது. எனவே, அத்தகைய பொருட்கள் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
பேராசிரியர் டி.வி.அனில்குமார் தலைமையில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த ஆராய்ச்சியின் பயனாக Cholederm எனப்படும் ஒருவகை திசு இணைப்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தீக்காயங்கள் மற்றும் நீரிழிவு காயங்களை குறைந்த வடுக்களுடன் குணப்படுத்துவது கண்டறியப்பட்டது.
இந்திய சந்தையில் கோலடெர்ம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சிகிச்சைச் செலவு ரூ.10,000/-லிருந்து ரூ.2,000/- ஆகக் குறைக்கப்பட்டு, சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931904
----
AP/PKV/GK
(Release ID: 1932083)
Visitor Counter : 179