மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

“சாகர் பரிக்ரமா” எனும் கடல்வழி சுற்றுப்பயணத்தின் ஆறாம் கட்டத்தை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மே 29, 2023 அன்று அந்தமானில் தொடங்குகிறார்

Posted On: 28 MAY 2023 11:00AM by PIB Chennai

2.8 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை முதன்மை நிலையிலும், பல லட்சம் மதிப்புத் தொடரிலும்  மீன்வளத் துறை வழங்குகிறது. இந்தத் துறை பல ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக மாறியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் மீன் உற்பத்தியில் 22 மடங்கு அதிகரிப்பு கொண்டதாக இத்துறை மாற்றம் பெற்றுள்ளது. 1950-51ல் வெறும் 7.5 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 2021-22ல் ஆண்டில் 162.48 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 2020-21 உடன் ஒப்பிடுகையில் 2021-22ல் மீன் உற்பத்தி 10.34% வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று, உலக மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிப்புடன் இந்தியா 3வது பெரிய மீன் உற்பத்தி நாடாக விளங்குகிறது. வளர்ப்பு மீன் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, உலகிலேயே சிறந்த வளர்ப்பு இறால் உற்பத்தி  நாடுகளில் ஒன்றாக உள்ளது.

 

மீனவர்கள், மீன் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளை சந்திப்பதற்காகவும், மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரச்சினைகள் பற்றி  அவர்களிடம்  நேரடியாகக் கலந்துரையாடுவதற்காகவும், மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களுக்காக மீன்வளத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட கடல் வழியாக நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல “சாகர் பரிக்ரமா” எனும் தனித்துவமான கடல்வழி சுற்றுப்பயண முயற்சியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மேற்கொண்டுள்ளார். “கடல்வழி சுற்றுப்பயணத்தின்” முதல் கட்டம் 2022, மார்ச் 5 அன்று குஜராத்தின் மாண்ட்வியிலிருந்து தொடங்கியது. இதுவரையிலான ஐந்து கட்டங்களில் மேற்குக் கடற்கரையில் குஜராத், டாமன் & டையூ, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள்  இடம்பெற்றன. ஆறாம்கட்டப் பயணம் கோடியாகாட், போர்ட் பிளேர், பனிகாட் மீன் இறங்கும் மையம், வி கே  பூர் மீன் இறங்கும் மையம், ஹட்பே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு போன்ற அந்தமான்  நிக்கோபார் தீவுகளின் பகுதிகளை உள்ளடக்கியது.

 

கடற்கரை நீளம் சுமார் 1,962 கிமீ, கான்டினென்டல் ஷெல்ஃப் எனும் கடலுக்கடியில் உள்ள கண்டத்தின் விளிம்பு பரப்பளவு 35,000 சதுர கிலோமீட்டர் என்ற நிலையில் மீன்வள மேம்பாட்டிற்கான பரந்த திறனை அந்தமான் நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளன. இதனைச் சுற்றியுள்ள தனிச்சிறப்புப் பொருளாதார மண்டலம் (EEZ) சுமார் 6,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.  சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்காமல், கண்டறியப்படாத மீன்வளத்தை அறுவடை செய்வதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீனவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும், மீன்வளத்துறையும், அந்தமான் & நிக்கோபார் நிர்வாகமும் பல்வேறு உடனடித் திட்டங்களை /நீண்டகாலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில்  2023 மே 29 முதல் 30 வரை நடைபெறும் சாகர் பரிக்ரமா நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் அந்தமான்  நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகம், மத்திய அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மீன்வளர்ப்புக்கான ராஜீவ் காந்தி மையம், (RGCA)  மற்றும் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA), இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம் மற்றும் மீனவர்களின்  பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

 

இந்த நிகழ்வின்போது,  முன்னேறிவரும் மீனவர்கள், மீன்பிடிப்போர் மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகள், இளம் மீன்வளத் தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு பிரதமரின் மத்ஸய சம்படா  திட்டம் (PMMSY), விவசாயக் கடன் அட்டை  (KCC) தொடர்பான சான்றிதழ்கள்/அனுமதிகள் வழங்கப்படும். பிரதமரின் மத்ஸய சம்படா  திட்டம், இ-ஷ்ரம், எஃப்ஐடிஎஃப், கேசிசி போன்ற திட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்  திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை  மீனவர்களிடையே பிரபலப்படுத்த அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலமும்  குறும்பாடல்கள் மூலமும் பரவலாக விளம்பரப்படுத்தப்படும்.

 

சாகர் பரிக்ரமா மீனவர்களின் மேம்பாட்டு உத்தியில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும். எனவே, காலநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட மீனவர்கள் மற்றும் மீன்வளத் தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் மற்றும் முழுமையான வளர்ச்சியில் இந்த சாகர் பரிக்ரமாவின் செல்வாக்கு, வரும் கட்டங்களில் கூடுதலாக இருக்கும்.           

 

***

AD/SMB/DL



(Release ID: 1927836) Visitor Counter : 180