குடியரசுத் தலைவர் செயலகம்
ராஞ்சியில் அளிக்கப்பட்ட பொதுமக்கள் வரவேற்பில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்
Posted On:
25 MAY 2023 8:50PM by PIB Chennai
ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மே 25, 2023 மாலையில் ஜார்க்கண்ட் அரசால் அளிக்கப்பட்ட பொதுமக்கள் வரவேற்பில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் ஜார்க்கண்ட் மாநிலம் என்பது புதிதாக இருக்கலாம் என்றும், ஆனால் பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதிக்கு தனி அடையாளம் உண்டு எனவும் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில மக்கள், நீர், காடுகள் மற்றும் நிலத்தை மதித்து இயற்கையான வாழ்க்கைச் சூழலை ஏற்றுக் கொண்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடி உள்ள காலக்கட்டத்தில் இந்த வாழ்க்கை முறை மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். இம்மாநிலத்தின் 30 சதவீத பகுதி காடுகளாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வளர்ச்சியை நோக்கி நடைபோடும் போதும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதாக கூறினார். நீடித்த வளர்ச்சியை எட்ட இதுவே சரியான வழி என்று அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ளது என்று கூறிய அவர், சூழல் சுற்றுலாவை மேம்படுத்த இம்மாநிலத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். இந்தத் துறையை முறையாக மேம்படுத்துவதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பல நவீன தொழிற்சாலைகள், குறிப்பாக கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள் இம்மாநிலத்தில் அதிகம் நிறுவப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இவை நவீன வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக கூறிய அவர், அண்மைக் காலங்களில் இம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நவீன வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இம்மாநிலம் வளர்ச்சியில் மேலும் முன்னணி இடத்தைப் பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
******
(Release ID: 1927357)
AD/PLM/RR/KRS
(Release ID: 1927437)
Visitor Counter : 133