புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

Posted On: 25 MAY 2023 4:37PM by PIB Chennai

வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க, பொருளாதார ரீதியாக லாபகரமான எரிபொருளைக் கண்டுபிடித்து பயன்படுத்துவது அவசியம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். மும்பையில் 'பசுமை ஹைட்ரஜன்'  மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய அவர், பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்கள் மாசுபாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், எரிபொருள் செலவைச் சேமிக்க உதவுவதாகக் கூறினார்.

பசுமை ஹைட்ரஜனின் விலை அதிகமாக இருந்தால் பயனுள்ளதாக இருக்காது என்றும், அவற்றை குறைந்த விலையில் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நாடு இப்போது இரண்டு பெரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அதில் ஒன்று லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பானது என்றும், இது நாட்டிற்கு பெரிய பொருளாதார சவாலாக உள்ளது என்றும் கூறினார்.

மற்றொரு சவால் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது எனவும், இவை இரண்டுமே கவலைக்குரிய விஷயங்கள் என அவர் குறிப்பிட்டார். காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டு வருவதாகவும், குறிப்பாக மெட்ரோ நகரங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

செலவு குறைந்த, மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் உற்பத்தி செய்தால், தற்சார்பு இந்தியா மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு விரைவில் நிறைவேறும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இது இறக்குமதிக்கு மாற்று வழிகளை வழங்குவதோடு, அனைத்து வகையான மாசுபாடுகளையும் குறைக்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவை எரிசக்தி ஏற்றுமதியாளராக மாற்ற வேண்டும் என்பதே தங்களது கனவு எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

 

****** 

AD/CR/KPG

 



(Release ID: 1927352) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Marathi