சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை ராயபுரம் மீன்பிடி துறைமுகத்தில் விழிப்புணர்வு முன்முயற்சி

Posted On: 16 MAY 2023 8:16PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினம் 2023ஐ ‘லைஃப்’ என்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து கொண்டாட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மற்றத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நிலையான கடல்சார் மேலாண்மைக்கான தேசிய மையம், லைஃப் இயக்கத்தின் கருப்பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான முன்முயற்சியை ராயபுரம் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்டுள்ளது. வடசென்னையின் ராயபுரம் பகுதியில் உள்ள காசிமேட்டில் அமைந்துள்ள இந்த துறைமுகம், தமிழ்நாட்டின் பரபரப்பான மீன்பிடி முனையங்களுள் முக்கியமானது. லைஃப் இயக்க நிகழ்வின் ஒரு பகுதியாக என்4 கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை பணியில் 125 மீனவர்கள், 50 கல்லூரி மாணவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 25 ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிலையான கடல்சார் மேலாண்மைக்கான தேசிய மையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மீனவர்களின் வசிப்பிடங்களில் இருந்து சுமார் 160 கிலோ நெகிழிக் கழிவுகளை சேகரித்தனர். இவற்றில் 70 கிலோ எடையுள்ள அப்புறப்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகள் உள்ளிட்டவை அடங்கும். மதிப்பு சங்கிலியை மேம்படுத்துவதற்காக சேகரிக்கப்பட்ட கழிவுகள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மீன்பிடித் தொழிலில் பின்பற்ற வேண்டிய நிலையான மற்றும் தூய்மையான நடைமுறைகள் குறித்து நிலையான கடல்சார் மேலாண்மைக்கான தேசிய மைய பணியாளர்கள் மீனவ சமூகத்தினரிடம் எடுத்துரைத்தனர்.  கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிராகவும், நெகிழி மாசைக் குறைப்பதற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

******

 (Release ID: 1924623)

AD/BR/RR



(Release ID: 1924680) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi