விண்வெளித்துறை
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டில் செயற்கைக்கோள் பயன்பாட்டு தொழில்நுட்பமையத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்
Posted On:
27 APR 2023 7:06PM by PIB Chennai
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டில் செயற்கைக்கோள் பயன்பாட்டு தொழில்நுட்ப மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். இந்த மையத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் பால் ஃபெவ்ரே, இதன் தொழில்நுட்ப செயல்பாட்டை அமைச்சருக்கு விவரித்தார்.
குறிப்பிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புக்காகவும், எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் தனித்துவமான 9 மையங்களில் ஒன்றாக இந்த மையம் பிரிட்டனில் உள்ளது. அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ளவும், பயனடையவும் இது உதவுகிறது. புதிய கண்டுபிடிப்புச் சூழலில் சிந்தனைகளை உருவாக்கும் மற்றும் தீர்வு காணும் பல்துறை குழுக்களை இது ஒருங்கிணைக்கிறது. செயற்கைக்கோள் பயன்பாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் பிரிட்டன் தொழில்துறைக்கு உதவுவதும், 2030-க்குள் உலகளாவிய விண்வெளிச் சந்தையில் 10 சதவீதப் பங்கினை பிரிட்டன் பெறுவதற்கு பங்களிப்பு செய்வதும் இந்தத் தொழில்நுட்ப மையத்தின் நோக்கமாகும்.
இந்தத் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளித்துறையில் உலகளாவிய முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா விளங்குகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், பிரிட்டனுடன் விண்வெளித்துறையில் ஒத்துழைத்து புதிய உச்சங்களைத் தொடுவதற்கு இந்தியா ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார். இந்த மையத்தின் பணியைப் பாராட்டிய அவர், இதனுடன் இந்தியாவின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி முகமை இஸ்ரோ ஒத்துழப்பதை எதிர்நோக்கியிருப்பதாக கூறினார்.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களைப் பெரும் எண்ணிக்கையில் செலுத்துவதன் மூலம் அதிக அளவு அந்நியச் செலாவணியை மீட்டுவதாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், இதுவரை 385 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்தியா செலுத்தியுள்ளது என்றும் இவற்றில் 353 செயற்கைக்கோள்கள் கடந்த 8 ஆண்டுகளில் செலுத்தப்பட்டவை என்றும் கூறினார்.
இந்தியாவின் மிக முக்கியமான ககன்யான் திட்டம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், 2024-ல் மனிதர்களுடன் முதலாவது விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
***
AD/SMB/RJ/KRS
(Release ID: 1920339)
Visitor Counter : 175