சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை நம்பகமான முறையில் மதிப்பீடு செய்ய எளிய பரிசோதனை சாதனத்தை உருவாக்கியுள்ளனர்

Posted On: 17 APR 2023 4:02PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன்மூலம் இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல்செல்- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்ட்சென்ஸ் (ARTSENS®) என்று அழைக்கப்படும் இக்கருவி, நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இமேஜிங் அல்லாத, கணினித் தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம் (HTIC) உருவாக்கியுள்ளது.

இந்தக் கருவியைக் கொண்டு 5,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் ஐந்து பயன்பாட்டுக் காப்புரிமைகளைப் பெற்றுள்ள இத்தொழில்நுட்பம், 10 வடிவமைப்புக் காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது.

விரிவான சோதனைக்குப் பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இக்கருவி தயார் நிலையில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்தநாள சோதனை நடத்துவதற்கு இதனைப் பயன்படுத்த வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் குழுவினர் விரும்புகின்றனர்.

இக்கருவியின் தொழில்நுட்பம் மற்றும் களஆய்வு முடிவுகள் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு வெளியீடுகளாக ஏற்கனவே வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரைகளை பின்வரும் இணைப்பில் காணலாம்: ஜர்னல் ஆஃப் ஹைபர்டென்ஷன் (doi: 10.1097/HJH.0000000000003181) மற்றும் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஃபிசியாலஜி-ஹார்ட் அண்ட் சர்குலேட்டரி ஃபிசியாலஜி (10.1152/ajpheart.00335.2022).

ஐஐடி மெட்ராஸ்-ன் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'ஜர்னல் ஆஃப் ஹைபர்டென்ஷன்' இதழின் கட்டுரையை எச்டிஐசி-ஐஐடி மெட்ராஸ் முன்னணி ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் பி.எம்.நபீல், ஐஐடி மெட்ராஸ் மின்பொறியியல் துறையில் பிஎச்டி பயிலும் திரு. வி.ராஜ் கிரண் மற்றும் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சிகிச்சை மற்றும் நடைமுறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ள போதும், இதயம், ரத்தநாளங்கள் தொடர்பான நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன. எனவே ஆரம்ப கட்டத்திலேயே கோளாறைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரிசெய்வது அவசியமாகும்.

ஆர்ட்சென்ஸ்-ன் பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் கூறுகையில், "ரத்தநாள ஆரோக்கியத்தின் நம்பகமான மதிப்பீட்டைக் கண்டறிய ரத்த நாளங்களின் சுவர்களில் நேரடியாக அளவிட வேண்டும். மாறாக தோலின் மேற்பரப்பில் அளவிடக் கூடாது. நோய் மற்றும் முதுமை காரணமாக ரத்தநாளச் சுவரில் ஏற்படும் மூலக்கூறு மற்றும் புரதநிலை மாற்றங்களின் விளைவை எவ்விதத்திலும் ஊடுருவாத, துல்லியமான முறையில் நாங்கள் உருவாக்கியுள்ள ஆர்ட்சென்ஸ் கருவியைக் கொண்டு அளவிட முடியும்" என்றார்.

டாக்டர் ஜெயராஜ் மேலும் கூறும்போது, "மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத அமைப்புகளான உடற்பயிற்சி மையம், சுகாதார மையம் போன்றவற்றிலும் கூட ஆர்ட்சென்ஸ் மூலம் பெருமளவிலான மக்களிடையே ரத்தநாளங்களின் முதிர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்ட்சென்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமனியின் வயது, உடல் செயல்பாடு (இன்மை), இதயநாள செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய நெதர்லாந்தில் உள்ள ராட்போட் பல்கலைக் கழக மருத்துவ மையத்தின் விஞ்ஞானிகள் இக்கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று, நோயின் பல்வேறு நிலைகளில் தமனியின் முதிர்ச்சியை உடலியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான டெல்லி எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இக்கருவியின் மருத்துவப் பயன்பாடு குறித்து எடுத்துரைத்த நெதர்லாந்தின் ராட்போட் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுபவருமான டிக் தைசேன் கூறுகையில், "600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சமீபத்தில் அதிநவீன ஆர்ட்சென்ஸ் கருவியைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்த எளிதாகவும், அதே நேரத்தில் ரத்தநாள முதிர்வை சரியாகப் புரிந்து கொள்ளவும் இக்கருவி உதவுகிறது. ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிட உதவும் இதுபோன்ற எளிய சாதனங்களால், மருத்துவ நடைமுறையை மேம்படுத்தவும், பரந்த அளவில் ஏற்கச் செய்யவும் முடியும்" எனத் தெரிவித்தார்.

"ஆர்ட்சென்ஸ் போன்ற கையடக்க, எளிதாகப் பயன்படுத்தும் சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி சரிபார்க்கும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவு குறைவதுடன், பரந்த அளவில் சோதனைகளை நடத்தும்போது மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றன. அதுமட்டுமின்றி, முதன்மைத் தடுப்பு உத்திகளில் ஆர்வமுள்ள எவரும் இவற்றைப் பயன்படுத்தலாம்" என ஐஐடி மெட்ராஸ், எச்டிஐசி ஆசிரியப் பொறுப்பாளர் டாக்டர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.

"இக்கருவி கையடக்கமாகவும், எளிதாகக் கையாளக் கூடியதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கிறது. நாங்கள் அறிந்தவரை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கோ, பெரிய அளவிலான பரிசோதனைகளுக்கோ பயன்படுத்த இது மிகப் பொருத்தமான ஒன்றாகும்" என ஹைபர்டென்ஷன் இதழில் ஆய்வுக் கட்டுரையை சமீபத்தில் எழுதிய விஞ்ஞானிகளான டாக்டர் பி.எம்.நபீல், வி.ராஜ் கிரண், டாக்டர் ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் கூறுகின்றனர்.

தமனிச் சுவரில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு மாற்றங்கள் காரணமாக உடலின் ரத்த நாளங்களில் நெகிழ்வுத் தன்மை, மென்மையை இழந்து கொழுப்புகள் சேருவது இதயநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தமனி கடினமாகி, முன்கூட்டியே முதிர்ச்சியடையும்போது இதய செயல்பாட்டில் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயநாள நோய்களுக்கு மைய ரத்த அழுத்தம் காரணமாகும்.

ஆர்ட்சென்ஸ்-ன் மற்றொரு கூட்டுப்பணியாளரான டெல்லி எய்ம்ஸ் உடலியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டினு எஸ். சந்திரன் கூறும்போது, "தமனியின் கடினத்தன்மை, மைய ரத்த அழுத்தத்தை மதிப்பிட உதவும் ஆர்ட்சென்ஸ்-ன் ஒரேயொரு சோதனை மூலம், பல்வேறு நோய்வாய்ப் பட்டவர்களுக்கு ரத்தநாளத்தின் ஆரோக்கியத் தன்மையை ஆரம்ப நிலையிலேயே மதிப்பீடு செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.

டாக்டர் எஸ்.சந்திரன் மேலும் கூறும்போது, "பின்வரும் நாட்களில் இதயநாள பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ள நபர்களுக்கு, பாரம்பரிய இதயநாள ஆபத்து அறிகுறிகள் ஏற்படும்போதே அதனைக் கண்காணிக்கும் வாய்ப்பை ஆர்ட்சென்ஸ் வழங்குகிறது. வழக்கமான இதயநாள பரிசோதனைகளோடு ஒப்பிடுகையில் ரத்தநாள ஆரோக்கியத்தை உரிய நேரத்தில் சரிசெய்வதற்கான 'முக்கிய காலஅவகாசத்தை' அளிக்கும்" என்றார்.

கைகாப்பு இயந்திரம் மூலம் வழக்கமாக அளவீடு செய்யப்படும் புறவெளி ரத்தஅழுத்தத்தை விட டோனோமீட்டர் மூலம் அளவிடப்படும் மைய ரத்த அழுத்தம்தான் இதய ஆரோக்கியத்தை மதிப்பிட பெரிதும் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் தமனியின் கடினத்தன்மை, மைய ரத்த அழுத்தம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து அளவிடுவதற்கு நம்பகமான, வசதியான கருவிகள் இதுவரை இல்லாத நிலைமை இருந்து வந்தது. இப்பிரச்சனைக்கு எச்டிஐசி-ஐஐடிஎம் தற்போது தீர்வு கண்டுள்ளது.

ஆர்ட்சென்ஸ் ஒரே நேரத்தில் தமனியின் கடினத்தன்மை, மைய ரத்தஅழுத்தம் இரண்டையுமே சரிபார்க்கிறது. கையின் மேற்பகுதி, தொடைகளில் காப்பு போன்ற சாதனம் சுற்றுப்பட்டையாக பொருத்தப்படும், கரோடிட் தமனியைக் கண்டறிய கழுத்துப் பகுதியில் கம்பி போன்ற கருவி பயன்படுத்தப்படும். இதயநாள ஆரோக்கியத்தைக் குறிக்கும் முக்கிய அம்சங்களான கரோடிட் தமனியின் கடினத்தன்மை, பெருநாடித் துடிப்பின் அலைவேகம், மைய ரத்த அழுத்தம் ஆகிய மூன்றையும் இக்கருவி அளவிடுகிறது.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மட்டுமின்றி, மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட முன்மாதிரிகளுக்கான பொறியியல், தொழில்நுட்ப மேம்பாட்டையும் ஐஐடி மெட்ராஸ் குழுவினர் மேற்கொண்டனர். உயிரிமருத்துவ நோய் அறியும் சாதனங்களின் செயல்திறனை நிரூபிக்கவும், தரநிலைகளைப் பூர்த்தி செய்யவும் ஆய்வுகள் நடத்தப்பட்டதுடன், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே சீரற்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இக்கருவியின் புதிய தயாரிப்பான ARTSENS®Plus-ன் பயன்பாடு, துல்லியத்தன்மை, உள்/இடை இயக்க மாறுபாடுகள் போன்றவற்றை 'ஜர்னல் ஆஃப் ஹைபர்டென்ஷன்' சமீபத்திய வெளியீட்டில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.

ஆர்ட்டரி சொசைட்டியின் வழிகாட்டுதலின்படி, இக்கருவியின் செயல்பாட்டை சரிபார்க்க மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதயநாள கடினத்தன்மை, மைய ரத்த அழுத்தம் ஆகியவற்றின் எளிய முறையிலான, நம்பகமான மதிப்பீட்டை அவர்கள் மருத்துவத் தரத்துடன் துல்லியமாக நிரூபித்துள்ளனர். இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இக்கருவி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்ட்சென்ஸ் கருவி தொடர்பான மேலதிக விவரங்கள், இதயநாள முதிர்ச்சி தொடர்பான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி போன்றவற்றை http://artsens.tech இணையதள முகவரியில் காணலாம்.

 


(Release ID: 1917336)
Read this release in: English