வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவும், பிரான்சும் உண்மையான நண்பர்களாகவும், துடிப்புள்ள ஜனநாயக நாடுகளாகவும் விளங்குவதுடன் உலக நன்மைக்காக செயலாற்றுகின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
11 APR 2023 6:45PM by PIB Chennai
இந்தியாவும், பிரான்சும் உண்மையான நண்பர்களாகவும் துடிப்புள்ள ஜனநாயக நாடுகளாகவும் விளங்குவதுடன் உலக நன்மைக்காக செயலாற்றுகின்றன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
பாரிசில் இன்று நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் வர்த்தக உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும்
இரு நாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா முதலீடுகள் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பை இரு தலைவர்களும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும், பிரான்சும் நிலையான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மண்டல மற்றும் உலக அளவிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சியை அதிகரிப்பதில் இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இரு நாட்டுத் தலைவர்களும் பிரான்ஸில் உள்ள இந்திய சமுதாயத்தினரும் இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவை வலுப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்களது தீவிர முயற்சிகளின் மூலம் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 25 ஆண்டுகாலம் இந்தியாவிற்கு பொற்காலமாக அமையும் என்று அவர் கூறினார். இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது என்றும் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தடையற்ற டிஜிட்டல் தொடர்புகள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும் அவர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஏற்றுமதி வளர்ச்சி மேலும் அதிகரித்து உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவில் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். வளர்ச்சியுடன் நிலைத்தன்மையையும் இந்தியா முன்னிலைப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளில் பசுமைப் பொருளாதாரம் என்பது வளர்ந்து வரும் முக்கியப் பிரிவாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியுடன் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
வளர்ச்சிப் பயணத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பன்மடங்கு அதிகரிப்பது குறித்து இந்தியாவும், பிரான்சும் தொடர்ந்து பேச்சு நடத்தும் என்று அவர் தெரிவித்தார். "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நீங்கள் இணைந்து செயல்பட்டால் இந்தியா உங்களது வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார்.
***
AP/PLM/RJ/KPG
(रिलीज़ आईडी: 1915716)
आगंतुक पटल : 194