வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அம்ருத் 2.0 நிலவரம்
Posted On:
27 MAR 2023 4:28PM by PIB Chennai
அடல் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கத்தின் (அம்ருத்) கீழ் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு அம்ருத் 2.0 கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சுமார் 500 அம்ருத் நகரங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன.
இந்த இயக்கத்தின் கீழ் ரூ.1,29,636 கோடி மதிப்பிலான 6527 திட்டங்களை செயல்படுத்த மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டங்களின் மூலம் 148 லட்சம் புதிய குழாய் இணைப்புகளை வழங்கவும், 33.42 லட்சம் புதிய கழிவுநீர் இணைப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு 8435 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், 2795 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம் ஆகியவை இதில் சேர்க்கப்படும்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தால் இதுவரை 6527 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனுமதி அளித்துள்ளன. இதன்படி, ரூ.36,481.47 கோடி மதிப்பிலான 2058 திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ.19,157.55 கோடி மதிப்பிலான 1025 திட்டங்களுக்கு டென்டர்கள் கோரப்பட்டுள்ளன. ரூ.5422.82 கோடி மதிப்பிலான 608 திட்டங்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.102.99 கோடி மதிப்பிலான 29 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இத்தகவலை மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை இணையமைச்சர் திரு கௌஷல் கிஷோர் மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AD/PKV/AG/KRS
(Release ID: 1911209)
Visitor Counter : 579