விவசாயத்துறை அமைச்சகம்
ஐந்து ஆண்டுகளில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் 50,000 ஹெக்டர் பரப்பளவில் கமலம் (டிராகன்) பழத்தை பயிரிடத் திட்டம்
Posted On:
13 MAR 2023 8:03PM by PIB Chennai
தெற்கு மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ள கமலம் என்று அழைக்கப்படும் டிராகன் பழம், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. தாமரை மலரின் சமஸ்கிருத பெயரான கமலம் என்று இந்தியாவில் இந்தப் பழம் அழைக்கப்படுகிறது. ‘21-வது நூற்றாண்டின் வியப்பூட்டும் பழம்' என்று இது அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கமலம் பழம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மொத்தம் சுமார் 3000 ஹெக்டர் பரப்பளவில் இந்தப் பழம் பயிரிடப்படுகிறது. உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை. எனவே இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான பழங்கள் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதியைக் குறைத்து, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ் கமலம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் 5 ஆண்டுகளில் கமலம் பழம் பயிரிடுவதற்கான நிலப்பரப்பை 50,000 ஹெக்டேராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரோக்கியமான பழத்தின் நடவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எ.ஆர்)- மத்திய தீவு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகத்திலும் தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ் கமலம் பழத்திற்கான சிறப்பு மையம் ஒன்று பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகத்தில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் கடந்த 2021-ஆம் ஆண்டு பதிவான ரூ.100 கோடி என்ற இறக்குமதி, கணிசமாகக் குறைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1906572
***
(Release ID:1906572)
SRI/RB/RR
(Release ID: 1906680)
Visitor Counter : 259