ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி பேல்களுக்கு சான்றிதழ் பெற தரக்கட்டுப்பாட்டு ஆணையைக் கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 22 FEB 2023 3:10PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் புதுதில்லியில் ஜவுளி ஆலோசனைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பருத்தி மதிப்பு சங்கிலியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அப்போது பருத்தி பேல்களுக்கு சான்றிதழ் பெற தரக்கட்டுப்பாட்டு ஆணையை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஜவுளித் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை  சிறந்த, தரம் வாய்ந்த பருத்தி நூல்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த அவர், இந்திய பருத்தி இழையின் தரத்தால் விவசாயிகள் மட்டுமல்லாது தொழிற்சாலைகளும் பெரும் பலனடையும் என்றும் குறிப்பிட்டார்.

 இந்திய பருத்திக்கு முத்திரை வழங்குவது, ஒட்டுமொத்த பருத்தியின் மதிப்பு சங்கிலிக்கு  கூட்டு மதிப்பு அளிப்பதுடன், விவசாயிகள் முதல் நுகர்வோர் வரை தனி அடையாளத்தையும் அளிக்கும் என்றார். இதற்காக மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பருத்தி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 2022 பிப்ரவரி 15-ந் தேதி மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  குறிப்பாக கஸ்தூரி பருத்தியை இந்தியாவின் முத்திரையாக அங்கீகரிப்பது மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த திட்டத்தை 2022-23 மற்றும் 2024-25 இடையேயான காலகட்டத்தில் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியின் தரத்தை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கஸ்தூரி பருத்தியின் தரத்தை உறுதி செய்வதற்கான பரிசோதனை வசதிகளை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இதற்காக ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் மற்றும் இந்திய தர ஆணையம் வாயிலாக  நவீன பரிசோதனை மையங்கள் உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிக்கி, இணைச் செயலாளர் திருமதி சுபா தாகூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***

SRI/ES/AG/KRS


(Release ID: 1901430) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Gujarati