குடியரசுத் தலைவர் செயலகம்
கோயம்பத்தூரின் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
18 FEB 2023 9:21PM by PIB Chennai
கோயம்பத்தூரின் ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை (பிப்ரவரி 18, 2023) நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவான் சிவன், அனைவருக்கும் பொருந்தக்கூடிய தெய்வம் என்று கூறினார். அவர்தான் முதல் யோகி மற்றும் ஞானி என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். சிவபெருமான் கருணை உள்ளம் பொருந்தியவராக இருந்த போதும் ருத்ரன் என்ற மற்றொரு பெயரின் காரணமாக மிகுந்த பயத்தை ஏற்படுத்தும் தெய்வமாக புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார் என்று திருமதி திரௌபதி முர்மு கூறினார். அந்த வகையில் இரண்டு விதமான சக்திகள், படைப்பாற்றல் மற்றும் அழித்தலின் சின்னமாக அவர் கருதப்படுகிறார். அவரது அழிக்கும் ஆற்றல் உண்மையிலேயே பிரபஞ்சத்தின் மீட்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.
பாதி ஆணும், பாதி பெண்ணுமாக அர்த்தநாரீஸ்வரர் என்ற வடிவத்திலும் சிவபெருமான் காட்சி தருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கும் ஆண் மற்றும் பெண்ணின் நிலைகளை இது உணர்த்துவதோடு இரண்டையும் சம அளவில் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
மகா சிவராத்திரி என்பது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் நிறைவடைந்து கோடை காலம் தொடங்குவதைக் குறிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அந்த வகையில் இருளை ஒழித்து ஒளியை ஊட்டும் பண்டிகையாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. முன்எப்போதும் இல்லாத வகையில் உலகளவில் சுற்றுச்சூழலியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். நம் உள்ளே இருக்கும் இருளை நீக்கி நிறைவான மற்றும் வளமான வாழ்வை இந்த மகா சிவராத்திரி அனைவருக்கும் வழங்கட்டும் என்று அவர் தெரிவித்தார்.
***
AP / RB / DL
(Release ID: 1900505)