சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அறிவியல் மூலம் புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் சூழலை ஆய்வாளர்களுக்கு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்
Posted On:
17 FEB 2023 5:16PM by PIB Chennai
அறிவியல் மூலம் புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் சூழலை ஆய்வாளர்களுக்கு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமைச்சர், முதலாவதாக இன்று (17.02.2023) ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றினார். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், 20 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்ரான் உரையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்துடன் ஜெய் விஞ்ஞான் என்பதையும் இணைத்துக் கொண்டார் என்றும், தற்போது இந்த முழக்கங்களோடு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெய் அனுஸந்தான் (ஆய்வு அமைப்புகள்) என்பதையும் இணைத்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
படைப்பாக்கம், ஆற்றல் மற்றும் நம்பிக்கையுள்ள சிந்தனைகளை ஏற்படுத்தும் நிலையில், புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் சூழலை ஆய்வாளர்களுக்கு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்கால சவால்களை சந்திக்க இந்தியா தயாராகி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் அனைவருக்குமானது எனும் நிலையில், உள்ளூர் தேவைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ப தீர்வுகளை தொழில்நுட்பம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பின்னர், பொதுக்கொள்கை உருவாக்குவது குறித்த பயிலரங்கிலும், அனைத்து ஐஐடிகள், ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர் பதிவாளர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் பங்கேற்று திரு சுபாஷ் சர்க்கார் உரையாற்றினார்.
பொதுக் கொள்கை என்பது சட்டங்கள், முறைப்படுத்தும் அம்சங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் இணைப்பாகும் என்று அவர் கூறினார். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பொதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வகையில் அனைவருக்கும் உயர்தரமான கல்வியை வழங்கி இந்தியாவை அறிவுசார் வல்லரசாக மாற்றுவதை தேசிய கல்விக்கொள்கை 2020 நோக்கமாக கொண்டுள்ளது. 21-ம் நூற்றாண்டுக்கான புதிய பாதையையும், புதிய யுகத்தையும் துவங்குவதற்கான விதைகளை புதிய கல்விக்கொள்கை விதைக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய கல்விக்கொள்கையை சிறப்புடன் செயல்படுத்த அனைவரது ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும் என்றார்.
2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து உயர்கல்வி பாட வகுப்புகளும், இணையதளம் மூலம் நடத்தப்படும் வகையில் புதிய கல்விக்கொள்கை டிஜிட்டல் கல்வி முறைக்கு ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார்.
பதிவாளர்களுக்கான திறன் கட்டமைப்பு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அமைச்சர், அன்றாட நடவடிக்கைகளை கையாளுவதுடன், கல்வி நிறுவனங்களை தொலைநோக்குப் பார்வையோடும், செயல் திறனோடும் இயக்குவதில் பதிவாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார். இரண்டு நாள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்கள் பங்கேற்கிறார்கள். பதிவாளர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு இந்த நிகழ்ச்சி பெருமளவு உதவும் என்று அவர் கூறினார்.
சிறப்பான அமைப்புசார்ந்த திறன்கள், பல வகையான பணிகள் செய்வதற்கான திறன், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பதிவாளர்கள் சிறந்து விளங்க பயிற்சிகள் அளிக்க திறன் கட்டமைப்பு ஆணையம் சென்னை ஐஐடி-யுடன் கூட்டாக பங்காற்றுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு மட்டுமானதாக தேசத்தின் பயணம் இருக்கவில்லை என்றும், உலக அரங்கில் கம்பீரத்தோடு எழுந்து நிற்பதற்குமான பயணம் என்றும் அமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். கல்வித்துறையில் சாதனைகள் படைத்து இந்தியாவின் தூதர்கள் என்று உலகத்திற்கு உரைப்பவர்களாக பதிவாளர்கள் திகழ வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் சென்னை ஐஐடி இயக்குனர் போராசிரியர் வி.காமகோடி, பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத், திறன் கட்டமைப்பு ஆணையத்தின் செயலாளர் திரு ஹேமங் ஜானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
******
(Release ID: 1900198)
Visitor Counter : 186