பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதியின் விளையாட்டுப் பெருவிழாவில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 16 FEB 2023 3:41PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, கோரக்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவி கிஷன் சுக்லா அவர்களே, இளம் விளையாட்டு வீரர்களே, பயிற்சியாளர்களே, பெற்றோர்களே, தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.

மகாயோகி குரு கோரக்நாத்தின் புண்ணிய பூமியில் நான் தலைவணங்குகிறேன். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறீர்கள். எனினும் சிலர் மட்டுமே போட்டியில் வெல்ல முடிகிறது. வேறு சிலர் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. விளையாட்டு மைதானமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் வெற்றியும், தோல்வியும் இயல்பான ஒன்றுதான். இந்த அளவுக்கு முன்னேறி வந்த நீங்கள், தோல்வியாளர்கள் அல்ல. நீங்கள் ஏராளமான விஷயங்களை கற்று, ஞானத்தையும், அனுபவத்தையும் பெற்றுள்ளீர்கள். இதுவே வெற்றிக்கான மிகப்பெரிய மூலதனமாகும்.  உங்களது விளையாட்டு உணர்வு வருங்காலத்தில் எப்படி வெற்றிக்கான கதவுகளை திறக்கப்போகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.  

எனது இளம் நண்பர்களே,  மல்யுத்தம், கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்லாமல் ஓவியம் வரைதல், நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற நடனங்கள், இசைக்கருவிகள் மீட்டுதல் போன்ற போட்டிகளும் நடைபெறவுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் அழகான, போற்றத்தக்க, ஊக்கமளிக்கும் முன்முயற்சியாகும். விளையாட்டு, கலை, இசை ஆகியவற்றில் காணப்படும் திறமையும், ஆற்றலும், உணர்வும் ஒன்றே. நமது இந்திய பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் தார்மீக பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.  ரவி கிஷன் அவர்களே ஒரு திறமைமிக்க கலைஞராவார். எனவே அவர் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது வெகுஇயல்பான ஒன்று.  இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்ததற்காக அவருக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே, கடந்த 3 வாரங்களில் நான் பங்கேற்கும்  மூன்றாவது நாடாளுமன்ற விளையாட்டுப் பெருவிழா இதுவாகும்.  உலகின் விளையாட்டு சக்தியாக இந்தியாவை மாற்றுவதற்கு பல புதிய வழிகளையும், புதிய நடைமுறைகளையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். விளையாட்டுத் திறமைகளை முன்னேற்றும் வகையில் உள்ளூர் மட்டத்தில் அடிக்கடி விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மக்களவை தொகுதி அளவில் இத்தகைய போட்டிகளை நடத்துவது உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்பதுடன்,  இந்தப்பிராந்தியத்தின் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனஉறுதியை அதிகரிக்கும் உந்துசக்தியாக இருக்கும். கடந்தமுறை கோரக்பூர் விளையாட்டுப் பெருவிழாவில், 18,000 முதல் 20,000 வீரர்கள் வரை பங்கேற்றனர். தற்போது இது 24,000 முதல் 25,000 ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 9000 பேர் நமது புதல்விகள் ஆவர்.  ஆயிரக்கணக்கானோர் சிறு கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து வந்துள்ளனர். இவ்வாறு இந்த விளையாட்டு விழா இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

நண்பர்களே, கேலோ இந்தியா இயக்கத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க  கோரக்பூர் தொகுதியின் கிராமப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன.  சவுரிசவுராவில் சிறிய விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தற்போது நாடு முழுமையான தொலைநோக்குடன் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் விளையாட்டுக்கென பல்வேறு வழிவகைகளில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், விளையாட்டு அமைச்சகத்துக்கு தற்போது 3 மடங்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல பகுதிகளில் நவீன விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கேலோ இந்தியா இயக்கத்துடன், உடல் தகுதி இந்தியா, யோகா போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.  ஊட்டச்சத்துமிக்க  தினை வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. தினை வகைகளை ஊக்குவிக்கும் இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தற்போது ஒலிம்பிக் போட்டிகளிலும், இதர விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வருவது போல இளம் வீரர்களான நீங்களும் அந்த மரபைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாட்டுக்கு வெற்றியையும், பெருமையையும் பெற்றுத்தருவீர்கள் என்ற நிச்சயமான நம்பிக்கை உங்கள் அனைவர் மீதும் எனக்கு உள்ளது.  உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***

(Release ID: 1899824)

VL/PKV/AG/RR


(Release ID: 1900074)