சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய அனைவருக்கும் உயர் கல்வி அவசியம்: விஐடி பல்கலைக்கழக வேந்தர் திரு. ஜி விஸ்வநாதன்

Posted On: 16 FEB 2023 4:22PM by PIB Chennai

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் திரு. ஜி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

‘அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும்மக்கள் நலத்திட்டங்கள்’ குறித்த 5 நாட்கள் நடைபெறும் புகைப்பட கண்காட்சி  வேலூரில் இன்று தொடங்கியது. இதனை விஐடி பல்கலைக்கழக வேந்தர் திரு. ஜி விஸ்வநாதன் தொடக்கி வைத்துப் பேசினார்.

இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் கோடிக் கணக்கானோர் உள்ளனர், அவர்கள் அனைவரின் விபரம் நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மூலம்தான் நம் நாடு விடுதலை அடைந்தது. இது போன்ற கண்காட்சிகள் மூலம் நமது ஊரில் இருந்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் அறிந்து கொள்ளலாம் என்று கூறினர்.

2022-ஆம் ஆண்டில் நாம் உலகின் வலுவான பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர்ந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 200 ஆண்டுகள் நம்மை  ஆட்சி செய்த நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட  வேண்டும். அதிலும் உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க நாம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மக்கள் தொடர்பக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் திரு. ஜே. காமராஜ், மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. அதனை தகுதியான நபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஏழை, எளிய மக்களுக்கும் கருவறை முதல் கல்லறை வரை அனைத்து நல்வாழ்வுத் திட்டங்களையும் அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதியான பயனாளிகளை ஒருபோதும் அரசு கைவிடாது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் சுமார் 50 வகையான தொழில்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பயிற்சி வழங்கிய பின்னர் அவர்களுக்கு வங்கிகள் மூலம் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதனை இளைஞர்கள் மற்றும் படித்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காமராஜ் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலூரைச் சேர்ந்த  பதினோராம் வகுப்பு  பள்ளி மாணவி ஜெரூஷா ஜாஸ்மினுக்கு  வேலூர் விஜடி பல்கலைக்கழக வேந்தர் திரு. ஜி. விஸ்வநாதன் கேடயம் வழங்கி, கௌரவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும், அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளின் தாய்களுக்கு பரிசுகள், வேளாண்மை திட்டத்தில் மானிய நிதியில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு திரு. ஜி. விஸ்வநாதன் வழங்கினார்.

பின்னர் நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்த்து பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் மத்திய அரசின் கள விளம்பர அலுவலர் திரு. முரளி, உதவி அலுவலர் திரு. ஜெயகணேஷ், வேலூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் திரு. விஸ்வநாதன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி. பூங்கொடி, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் திரு. ராஜ கோபாலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திரு. சுஜாதா உள்பட பலர் பங்கேற்றனர்   

•••••

    

    

    



(Release ID: 1899837) Visitor Counter : 145


Read this release in: English