ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர்வளம் குறைவதைத் தடுக்கவும், மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் நடவடிக்கைகள்

Posted On: 13 FEB 2023 4:33PM by PIB Chennai

நீர்வளம் மாநிலப் பட்டியலில் உள்ளதால், நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்வளங்களைத் திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்யும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.  மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவைப் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி வருகிறது.  நாடு முழுவதும் மழைநீர் சேரிப்புக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துகிறது.

     ஜல்சக்தி அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், வீட்டுவசதி அமைச்சகம் ஆகியவையும் மாநில அரசுகளும் மழைநீர் சேகரிப்பில் பங்காற்றுகின்றன.  நீர்வளம் குறைவதைத் தடுப்பது மற்றும் மழைநீர் சேகரிப்புக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான தகவல்கள்

http://jalshakti-dowr.gov.in/sites/default/files/Steps_to_control_water_depletion_Feb2021.pdf என்ற இணையதள இணைப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

     நீர்ப்பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையில் நீர்நிலைகள் தொடர்பான புவி ஆய்வு, அனைத்து மாவட்டங்களிலும் ஜல்சக்தி மையங்களை அமைத்தல், வனப்பரப்பு குறைதலைத் தடுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

     ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு இயக்கம் நாடு தழுவிய அளவில் 29.03.2022 அன்று தொடங்கப்பட்டது.  இதன்கீழ் தற்போது வரை நீர்த்தொடர்பான 39.46 லட்சம் பணிகள் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  நீர்த்தொடர்பான பணிகளுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.37 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

     மாதிரி கட்டட துணைச்சட்டம் 2016-ன் கீழ், மழைநீர் சேகரிப்பு அம்சமும் கட்டடங்களில் இடம்பெற வேண்டும் என்பது சேர்க்கப்பட்டு அது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு தொடர்பான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், இதை மேற்கொள்ளாவிட்டால் அபராதம் விதிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  மத்திய நிலத்தடி நீர் வாரியம் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, நிலத்தடி நீர் பெருக்கத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் 1.42 கோடி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.   

     இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898803

***

AP/PLM/UM/GK


(Release ID: 1898897) Visitor Counter : 172


Read this release in: English , Urdu