ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் நீரின் தரத்தை உறுதி செய்தல்
Posted On:
13 FEB 2023 4:31PM by PIB Chennai
ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின்கீழ், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குடிநீர்க் குழாய் இணைப்பு இருந்தது. இந்தத் திட்ட அமலாக்கத்திற்குப் பின், 7.88 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டில் கிராமப்பகுதிகளில் மொத்தமுள்ள 19.39 கோடி வீடுகளில் இதுவரை மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தமுள்ள கிராமப்புற வீடுகளில் 57.36 சதவீதமாகும்.
குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் போது, பாதுகாப்பான நீர் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. ஆர்சனிக் மற்றும் ஃப்ளூரைட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சமுதாய நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நீரின் ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் தன்மைகளை சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 2076 நீர் சோதனை மையங்கள் உள்ளன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898798
***
(Release ID: 1898860)
Visitor Counter : 156