சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பொருட்கள் மறுசுழற்சி தொழில்துறையில் மத்திய அரசு உறுதியான அக்கறை கொண்டுள்ளது - இது ஊக்குவிக்கப்பட வேண்டிய மற்றும் முன்னேற்றப்பட வேண்டிய துறை: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா
Posted On:
04 FEB 2023 5:37PM by PIB Chennai
இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய மற்றும் முன்னேற்றப்பட வேண்டிய துறையான பொருட்கள் மறுசுழற்சித் தொழில் துறை தொடர்பாக மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். கொச்சியில் இந்திய, பொருட்கள் மறுசுழற்சி சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொருட்கள் மறுசுழற்சி தொடர்பான 10-வது மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் அவர் பேசினார். மறுசுழற்சித் தொழில்துறை இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் பங்களிக்கிறது என்றும் இது வரும் ஆண்டுகளில் 35,000 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். வரவிருக்கும் தலைமுறைக்கு வழிகாட்டும் பொறுப்பு உள்ளது எனவும் பொருட்கள் மறுசுழற்சி துறை முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
அமிர்தகாலத்துக்கான இந்தியாவின் பயணம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் மறுசுழற்சித் துறையில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் கூறினார். 22 சதவீதம் எஃகு மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறிய அவர், ஆனால் இந்த துறையின் வளர்ச்சிக்கு முறைசாரா துறையையும் இதில் இணைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
எஃகுத் தொழில் துறை மறுசுழற்சித் துறையின் துணைப் பிரிவு என்று அவர் குறிப்பிட்டார். 6 'ஆர்'-கள் என்ற கொள்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாடு, மீட்டெடுத்தல், மறுவடிவமைப்பு மற்றும் மறுஉற்பத்தி செய்தல் (Reduce, Recycle, Reuse, Recover, Redesign and Remanufacturing) ஆகிய 6 'ஆர்'களின் கோட்பாடு ஒவ்வொரு நல்ல நிறுவனத்திலும் நிர்வாகக் கட்டமைப்பின் உருவகமாக மாற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறுவதாக அவர் குறிப்பிட்டார். கோவிட் தொற்றைக் கையாண்ட விதம், சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி உட்பட ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தியா பலவற்றில் முதன்மையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில், மறுசுழற்சி உட்பட சுழற்சிப் பொருளாதாரத் துறையில் மற்றொரு முதன்மை இடத்தை இலக்காகக் கொண்டு இந்தியா செயல்படுவதாக அவர் கூறினார்.
சுழற்சிப் பொருளாதாரத்துக்கு எஃகு மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார். எஃகுத் துறை பல வகையான கழிவுகளை உற்பத்தி செய்கிறது என்று கூறிய அவர், உலகம் முழுவதும் கழிவுகளின் மறுசுழற்சிப் பயன்பாடு பல தொழில்களில் அதிகரிக்க வேண்டும், என்றார். அந்த இலக்கை நோக்கி தீவிரமாக இந்தியா செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் எஃகு உற்பத்தி ஆண்டுக்கு 80 மில்லியன் டன்னில் இருந்து 120 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 22 சதவீத எஃகு மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மறுசுழற்சி மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில், முறைசாரா துறையை முறையான துறைக்கு கொண்டு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறினார்.
இந்திய பொருட்கள் மறுசுழற்சி சங்கம் கொச்சியில் 2023 பிப்ரவரி 2 முதல் 4 வரை சர்வதேச இந்திய பொருட்கள் மறுசுழற்சி மாநாட்டை நடத்தியது. உலகளாவிய மறுசுழற்சியாளர்களின் இந்த மிகப்பெரிய மாநாட்டில் 38 நாடுகளில் இருந்து 450 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 1800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மறுசுழற்சி விகிதத்தை அதிகப்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலைக்கான இந்தியாவின் இலக்கை அடைய உதவுதல் ஆகியவை தொடர்பாக விவாதிக்க இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் சர்வதேச தொழில்துறை பிரதிநிதிகள், மத்திய எஃகு அமைச்சகம், சுரங்க அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மின்னணுவியல் அமைச்சகம், கப்பல்துறை அமைச்சகம், இந்திய தரநிலைக அமைப்பு, நித்தி ஆயோக் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896312
---------
(Release ID: 1896379)
Visitor Counter : 171