சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற மகளிருக்கான சுகாதாரத் திட்டங்கள்

Posted On: 03 FEB 2023 4:54PM by PIB Chennai

மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.  குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 

மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டியது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலையாயக் கடமை.  இதனை கருத்தில் கொண்டு, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒன்றரை லட்சம் உதவி சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற முதன்மை மையங்கள் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மகப்பேறு, குழந்தை சுகாதார சேவைகள், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் ஆகியவற்றுக்கு தரமான சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

இதில் தொற்றா நோய்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பொதுவாக பரவும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 3 நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 

தேசிய இலவச மருந்துவ முன்னெடுப்பு:  நோயாளிகள் பயன்பெற ஏதுவாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். 

இலவச பரிசோதனை சேவைகள்: 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு உதவும்.

தேசிய ஆம்புலன்ஸ் சேவை: தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ள மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.  இந்த சேவைக்கு 108/102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை  பயன்படுத்திக் கொள்ளலாம்

நடமாடும் மருத்துவ அலகுகள்: தொடர்பு கொள்ள இயலாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ வசதி வழங்க ஏதுவாக, பொது சுகாதார மையங்கள் வாயிலாக நடமாடும் மருத்துவ அலகுகள் பயன்படுத்தப்படும். 

குறிப்பாக நாடுமுழுவதும் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சுகாதார சேவை சென்று சேர வேண்டும் என்பதே தேசிய சுகாதார இயக்கத்தின் இலக்காக உள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

------ 

AP/ES/PK/RJ


(Release ID: 1896123)
Read this release in: English , Telugu