சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாசித்துவாரத்தின் வழியாக செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான iNNCOVACC-கை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அறிமுகம் செய்தார்
Posted On:
26 JAN 2023 4:29PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாசித்துவாரத்தின் வழியாக செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான iNNCOVACC-கை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், இன்று அறிமுகம் செய்தார். இது, நாசித்துளைகளில் செலுத்தக்கூடிய 2ம் கட்ட டோஸாகவும், பன்முக பூஸ்டர் டோஸாகவும் அனுமதி பெறும் முதல் தடுப்பூசி ஆகும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் உயிரி-தொழில்நுட்பத்தின் கீழ், உயிரி தொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி அமைப்பான (பிஐஆர்ஏசி) மற்றும் பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் (பிபிஐஎல்) கூட்டுமுயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிமுக விழாவில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, இந்தியாவில் இருந்து விநியோகம் செய்யப்படுவதாகக் கூறினார். பிபிஐஎல் மற்றும் உயிரி-தொழில்நுட்பத்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாசித்துவாரத்தின் வழியாகச் செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசி, தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதில் பெரும் பங்களிப்பாற்றுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தடுப்பூசிகள் தரமானதாகவும், விலை மலிவாகவும் இருப்பதால், நமது தடுப்பூசி உற்பத்தி மற்றும் புதியக் கண்டுபிடிப்புகள் உலக நாடுகளால் பெரிதும் வரவேற்கப்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
கோவிட் சுரக்ஷா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதில் பிரதமரின் வழிகாட்டுதலும், கண்காணிப்பும் முக்கியப் பங்கு வகித்ததாகவும், உலகளவில் இந்தியாவை தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயிரி-தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர். ராஜேஷ் கோகலே மற்றும் அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
*****
AP / ES / DL
(Release ID: 1893988)
Visitor Counter : 290