சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நாடு முழுவதும் வீர தீர சாகச (பராக்கிரம) தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 2,300 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்

Posted On: 24 JAN 2023 4:53PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்த தினமான ஜனவரி 23 அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 270 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2,300 மாணவர்கள் கலந்து கொண்டனர். மகத்தான தலைவரின் வாழ்க்கை முறையிலிருந்து உத்வேகமும், தேசபக்தியும் மாணவர்கள் பெறும்வகையில் இந்த தினம் வீர தீர சாகச (பராக்கிரம)  தினமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் இயங்கும் இடங்களில் மாவட்ட வாரியாக கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் கேந்திர வித்யாலயா சங்கம் இந்த ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 130 சிபிஎஸ்இ பள்ளிகள், 101 மாநில அரசுப் பள்ளிகள், 41 கேந்திர வித்யாலயா மற்றும் 4 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த தனித்துவமான முன்னெடுப்பில் கலந்துகொண்டனர். இதில் 9 பள்ளிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவை. மற்றவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவையாகும்.  பிரதமர் நரேந்திர மோடி எழுதிய தேர்வுக்கு பயமேன் என்ற புத்தகம் பற்றிய தலைப்பில் போட்டி நடைபெற்றது.  இந்த புத்தகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை பகிர்ந்து தேர்வு அச்சத்தை குறைக்கிறது.

தேர்வுக்கு பயமேன் என்ற புத்தகத்தில் பிரதமர்  குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படையில், ‘யோகா மாற்றத்தை ஏற்படுத்துகிறது’, ‘உன்னையே நீ அறிந்துகொள்’, ‘வியக்கத்தக்க இந்தியா’, ‘போராளியாக இரு, கவலைப்படுபவராக இருக்காதே’ உள்ளிட்ட தலைப்புகளின் அடிப்படையில் ஓவியங்கள் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 ஓவியங்கள் சிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன.  அவர்களுக்கு சான்றிதழ், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த  புத்தகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சகத்தின் இந்த தனித்துவமான முன்னெடுப்பால் இந்தியா முழுவதிலுமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று படைப்புத்திறன் வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது.  ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களுடன் மட்டுமல்லாமல், வெளிநாட்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு மற்றும் பள்ளிபடிப்புக்கு பிந்தைய வழிகள் குறித்து விவாதிக்கவுள்ளதன் ஒரு பகுதியாக இப்போட்டி நடத்தப்பட்டது.

******

AP/IR/AG/KRS

         



(Release ID: 1893295) Visitor Counter : 127


Read this release in: English