பாதுகாப்பு அமைச்சகம்

மும்பையில் இந்திய கடலோர காவல்படை நடத்திய ஆறு நட்பு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்காக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரகால பயிற்சி வகுப்பு நிறைவு

Posted On: 21 JAN 2023 5:39PM by PIB Chennai

மும்பையில் இந்திய கடலோர காவல்படை நடத்திய ஆறு நட்பு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்காக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரகால (ஜனவரி 16-21, 2023) பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.

 

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், பங்களாதேஷ், சீஷெல்ஸ், இலங்கை, மொரிஷியஸ், மியான்மர் மற்றும் மாலத்தீவு ஆகிய ஆறு நட்பு நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர். இந்தச் சிறப்புப் பயிற்சியில் மொத்தம் 22 பயிற்சியாளர்கள் (10 அதிகாரிகள் & 12 மாலுமிகள்) பங்கேற்றனர்.

 

கடல்சார் தேடல், மீட்பு, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, உலகளாவிய கடல்சார் ஆபத்து மற்றும் பாதுகாப்பு அமைப்பு, வானூர்தி மற்றும் கடல்சார் தேடல்-மீட்பு, செயற்கைக்கோள் உதவியுடன் உதவி நடவடிக்கைகள் போன்றவற்றின் பின்புலத்தில் சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பயிற்சியில் இந்திய தேசிய பணி கட்டுப்பாட்டு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணையம், கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய மையம் மற்றும் இந்திய கடலோர காவல்படை போன்றவற்றைச் சேர்ந்த  நிபுணர்கள் விரிவுரைகளை வழங்கினர். மேலும் பணி சார்ந்த செயல்முறை பயிற்சிகள் மும்பை விமான நிலையத்தின் தலைமை இயக்குநர் கப்பல் தகவல் மையத்திலும், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்திலும் நடைபெற்றது.

 

இந்த பயிற்சி வகுப்பை கடலோர காவல்படை மண்டல (மேற்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.வி.பட்கர் தொடங்கி வைத்தார்.

*****

GS / DL(Release ID: 1892733) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi , Marathi