குடியரசுத் தலைவர் செயலகம்

வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டுக்கு இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கயானா அதிபருடன் பேச்சு நடத்தினார்

Posted On: 10 JAN 2023 6:59PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும்  17-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டுக்கு இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலியுடன் இன்று பேச்சு நடத்தினார்.

கயானா அதிபரை வரவேற்று பேசிய குடியரசுத் தலைவர், 17-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா மாநாட்டில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

இந்தியாவும், கயானாவும் புவியியல் ரீதியாக நீண்ட தொலைவை கொண்ட நாடுகளாக பிரிந்து இருந்தாலும், காலனி ஆதிக்கம், பல்வேறு சமுகங்களை  கொண்ட  கலாச்சாரம்  போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மிக முக்கியமாக, கயானாவில் அதிக அளவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்துபவர்களாக திகழ்கின்றனர் என்று அவர் கூறினார்.

இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார். கயானாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள், இந்தியாவுக்கும், கயானாவுக்கும் இடையேயான  ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டை இத்துறையில் அதிகரிப்பதற்கு அதீத வாய்ப்பாக அமைந்துள்ளன என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். எண்ணெய் மற்றும் எரிசக்தி மதிப்பு தொடரில் இந்தியா நல்ல அனுபவமும், நிபுணத்துவமும் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வத்துடன் இருப்பதாக கூறிய குடியரசுத்தலைவர், திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் இந்தியாவின் முன்னுரிமைகளுக்கு கயானா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

***

SMB/PLM/RS/KPG



(Release ID: 1890109) Visitor Counter : 137


Read this release in: English , Urdu