திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 30 DEC 2022 6:40PM by PIB Chennai

இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் 2022 ஆம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் சில:

* கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் திறன் மைய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

*பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டில் 7.36 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

* கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான தனித்துவமான சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 1.20 லட்சம் விண்ணப்பதாரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

* 2022-ம் ஆண்டில் 1957 பள்ளிகளில் உள்ள திறன் மையங்களில் 2.28 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர்.

* 116 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ட்ரோன் தொடர்பான பயிற்சிகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* 274 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இரட்டைப் பயிற்சி முறையை (டிஎஸ்டி) செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* தேசிய, மாநில அளவில் 14000-க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களில் முதல் முறையாக 17 செப்டம்பர் 2022 அன்று 8.5 லட்சத்துக்கும் அதிகமான பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

* திறன் பயிற்சிக்காக பாரத் ஸ்கில்ஸ் என்ற பிரத்தியேக இணையதளம் 2019 அக்டோபரில் தொடங்கப்பட்டது. இதில் திறன் பயிற்சியாளர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள் வீடியோ பதிவுகள் போன்றவை 6 மொழிகளில் இடம் பெற்றுள்ளன. 10 டிசம்பர் 2022 வரை இந்த இணையதளத்தை 47 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு கோடியே 96 லட்சத்திற்கும் கூடுதலான முறை பார்க்கப்பட்டுள்ளது.

*  2021-2022 மின் ஆளுமைத் திட்டத்திற்கான தேசிய விருதுகளின் கீழ் பாரத்ஸ்கில்ஸ் இணையதளத்திற்கு "குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்குதல்" என்ற பிரிவின் கீழ் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாரத்ஸ்கில்ஸ் தேசிய திறன் இணையதளம், டிஜிட்டல் திறன் பயிற்சிக்கான முதன்மை இணையதளமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் அமெரிக்க இந்தியா அறக்கட்டளையும் (AIF) இணைந்து வேலை வாய்ப்பு மேம்பாடு குறித்த டிஜிட்டல் படிப்பை வழங்குவதன் மூலம் 1 லட்சம் இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டுள்ளன.

* விளையாட்டு, உடற்கல்வி, உடற்தகுதி கவுன்சிலுடன் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், பணிபுரியும் பெண்கள் மற்றும் ஐடிஐ மாணவிகள் 10,000 பேருக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

*  திறன் மேம்பாட்டின் மிகவும் நிலையான வடிவங்களில் ஒன்றான தொழில் பழகுநர் பயிற்சி முறையை மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.

* ஆடை வடிவமைப்பு, அழகு மற்றும் ஆரோக்கியம், மொபைல் பழுதுபார்ப்பு, உணவு பதப்படுத்துதல், மின்சாரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் பாதுகாப்பு ஆதரவை வழங்கும் வகையில் 5 வாழ்வாதார தொழில் பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

* பிரதமரின் யுவ யோஜனா திட்டத்தின் மூலம் 991 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 1071 நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

* பிஎம் உதய்மி டாக்ஸ் (PM-Udyami Talks) என்ற யூடியூப் சேனல், தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் முறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் இந்த யூடியூப் சேனல் நடத்தப்படுகிறது.

* ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் எனப்படும் மக்கள் கல்வி நிலையங்கள் மூலம் கல்வியறிவு இல்லாதவர்கள், அடிப்படைக் கல்வியறிவு மட்டும் உள்ளவர்கள், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் போன்றவர்களில் 15 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தொழில்சார் திறன் பயிற்சிகள் அரசு சாரா தொண்டு அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகள் என பல்வேறு இடங்களில் பலர் இதில் பயன்படுகின்றனர்.

*2019-ம் ஆண்டில் உலகத் திறன்போட்டியில் 13-வது இடத்தைப் பெற்ற இந்தியா, 2022-ம் ஆண்டுக்கான உலகத் திறன் போட்டியில் (WSC 2022) 11 -வது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 13 சிறப்புப் பதக்கங்களை இந்தியா வென்றது. இந்த வெற்றியானது, இளைஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் திறன் சூழலில் உள்ள மற்றவர்கள் மத்தியில் இந்தப் போட்டியில் பங்கேற்பது பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.

* சர்வதேச திறன் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, பெலாரஸ், ​​சீனா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய 11 நாடுகளுடன் அரசுத் தரப்பு அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

******

MS/PLM/DL


(Release ID: 1887690) Visitor Counter : 439