ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே துறை செயல்பாடுகள் குறித்த ஆண்டுக் கண்ணோட்டம்
இந்திய ரயில்வே ரயில் வழித்தடத் திட்டங்களை விரைவாக முடிக்க முன்னுரிமை அளித்து செயல்படுகிறது
இந்த நிதி ஆண்டில் இதுவரை 2022 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன
Posted On:
13 DEC 2022 6:32PM by PIB Chennai
இந்திய ரயில்வே, தளவாடங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ரயில்வே வழித்தடங்கள் தொடர்பான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரயில்வே வழித்தடத் திட்டங்களின் முன்னேற்றம், புதிய வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மாற்றுதல் மற்றும் வழித்தடங்களை அதிகரித்தல் போன்ற பணிகள் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.
இந்த நிதியாண்டில் டிசம்பர் 12, 2022 வரை, 2022 கிலோமீட்டர் (டிகேஎம்) நீளத்திற்கு புதிய பாதைகள், அகல ரயில் பாதையாக மாற்றுதல் மற்றும் பன்னோக்குக் கண்காணிப்பு திட்டங்களை ரயில்வே நிறைவு செய்துள்ளது.
இந்த நிதியாண்டில் தற்போதுவரை 109 டிகேஎம் (டிராக் கிலோ மீட்டர்) புதிய வழித்தடங்கள், 102 டிகேஎம் நீளத்திற்கு வழித்தட மாற்றுதல் மற்றும் 1811 டிகேஎம் நீள பல்முனை ரயில் தண்டவாளங்கள் ஆகியவை நிறைவடைந்துள்ளன.
2009-14 ஆம் ஆண்டில் வழித்தடம் அமைப்பதில் சராசரி இரட்டிப்பு ஆண்டுக்கு 375 கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்தது. இது 2014-22-ல் ஆண்டுக்கு 1394 கிலோ மீட்டர் ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டில் நவம்பர் வரை 756 கிலோ மீட்டர் அளவுக்கு இரட்டிப்பு/மல்டி டிராக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த ஆண்டு 1930 கிலோ மீட்டர் வரை அது அதிகரித்துள்ளது.
இந்திய ரயில்வே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2000 கிலோ மீட்டர் பாதை அமைத்தல் என்ற இலக்கை எட்டியது. தற்போதைய 2022-23 நிதியாண்டில் டிசம்பர் 2-வது வாரத்தில் கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி அதிகபட்சமாக 2904 கிலோ மீட்டர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் திட்டங்களை திறம்படவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள்
(i) முன்னுரிமைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிப்பு
(ii) பல்வேறு நிலைகளில் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்தல், மற்றும்
(iii) விரைவாக நிலம் கையகப்படுத்துதல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான அனுமதி மற்றும் தீர்வுக்காக மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் 2021 அக்டோபரில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் ஒரு சிறந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது ரயில்வே, கப்பல் போக்குவரத்து, சாலைவழித் தடங்கள், தொலைத்தொடர்பு, போன்ற உள்கட்டமைப்புத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பன்னோக்கு மாதிரி இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் தளவாடச் செலவைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் தேசிய வளங்களின் விரயத்தைத் தவிர்க்கிறது. நாட்டில். மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் இந்திய உற்பத்தி உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக மேம்படுத்தும்.
இந்திய ரயில்வே தனது திட்டமிடல் செயல்பாட்டில் விரைவு சக்தியின் கொள்கைகளை உடனடியாக உள்வாங்கி செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. BISAG-N நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விரைவு சக்தி புவித் தகவல் நடைமுறை தளத்தில் 342 க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன.
ரயில்வே வாரியத்தில் விரைவு சக்தி இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ரயில்வேயின் 68 பிரிவுகளிலும் விரைவு சக்தி அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களுக்கான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் அம்சங்களுக்கு இடையே முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
**************
AP/PLM/RJ/KPG
(Release ID: 1883448)
Visitor Counter : 196