அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் உயிர்-பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
03 DEC 2022 4:17PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இந்தியாவின் உயிர் -பொருளாதாரம் 8 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை & புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் , அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் உயிர் அறிவியல் மற்றும் ரசாயனத் தொழில்நுட்பம் சார்ந்த 3 நாள் சர்வதேசக் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் உரையாற்றிய அவர், கடந்த 2014ம் ஆண்டு, 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிர் பொருளாதாரம் 2022ம் ஆண்டு 80 பில்லியன் டாலராக வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறினார். இதேபோல், கடந்த 2014ம் ஆண்டு 52-ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டு 5,300-ஆக அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு ரூ.10 கோடியாக இருந்த உயிர்-பொருளாதாரத் துறைக்கான முதலீடு, தற்போது ரூ.4,200 கோடியாக, அதாவது 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதன்மூலம் 25,000 உயர்திறன் சார்ந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 2021ம் ஆண்டு, இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 1.4 பில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
புதியக் கண்டுபிடிப்புகளும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களின் திறமைகளும், சர்வதேச நாடுகளுக்கு கூடுதல் நம்பிக்கையை ஊட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதேபோல் இந்திய உயிரியல் வல்லுநர்கள் மீதான நம்பிக்கையும், கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வரும் 5ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், அமெரிக்கா, கிரீஸ், தென் கொரியா, தாய்லாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 14 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதில், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியல் வல்லுநர்களும், நிபுணர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
******
AP/ES/DL
(Release ID: 1880699)
Visitor Counter : 199