தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கட்டி பதங் கிளாசிக் படம் குறித்த ஆஷா பரேக்கின் மலரும் நினைவுகள்
“பியார் திவானா ஹோதா ஹை, மஸ்தானா ஹோதா ஹை
ஹர் குஷி சே ஹர் காம் சே, பேகனா ஹோதா ஹை”
கிஷோர் குமாரின் காந்தக் குரலும், ராஜேஷ் கன்னாவின் இளமைத் தோற்றமும் பனாஜியில் உள்ள மக்வினெஸ் பேலஸ் அரங்கின் திரையில் இந்த மறக்க முடியாத பாடலுடன் மீண்டும் தோன்றியதால், பார்வையாளர்களுக்கு இது ஒரு சொர்க்க தருணமாக இருந்தது. பாடலில் நடித்தவரும், முன்னணி நடிகையுமான ஆஷா பரேக்கிற்கு, கட்டி பதங் திரையிடலில் கலந்துகொண்டது, இதயத்தைத் தொடும் தருணங்களாக அமைந்தது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் கிற்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள ரெட்ரோ பிரிவில் இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் கட்டி பதங் திரையிடப்பட்டது.
திரையிடலில் பங்கேற்று, விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஆஷா பரேக், பல ஆண்டுகளாக, இந்திய சர்வதேச திரைப்பட விழா வளர்ந்து வந்துள்ளதாகவும், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைக் காட்சிப்படுத்தவும் விற்கவும் இது வாய்ப்பளிக்கிறது என்றும் கூறினார். “திரைப்படத் துறையை நான் விரும்புகிறேன். திரைப்பட ஆர்வலர்களுக்கு, இது சிறந்த இடமாகும்.” என்று அவர் கூறினார். ஆஷா பரேக், சர்வதேச திரைப்பட விழா அமைப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.
பல சூப்பர் ஹிட் படங்களால் புகழ் பெற்ற ஆஷா பரேக் 1960 மற்றும் 70 களில் ஹிந்தி சினிமாவின் ‘ஹிட் கேர்ள்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, தில் தேகே தேகோ (1959) வில் கதாநாயகியாக அறிமுகமானார். இது பெரிய வெற்றியைப் பெற்றதுடன், அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்துச் சென்றது. சக்தி சமந்தா, ராஜ் கோஸ்லா, நசீர் உசேன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ஷம்மி கபூர், மனோஜ் குமார், தேவ் ஆனந்த் மற்றும் பல முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களின் படங்களிலும் முன்னணி நடிகர்களுடனும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். அவர் கட்டி பதங் படத்திற்காக (1971) சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் மேலும் பல மதிப்புமிக்க அங்கீகாரங்களுடன் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதை (2002) பெற்றார். ஆஷா ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஒரு சிறந்த இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். அவருக்கு பத்மஸ்ரீ (1992) வழங்கப்பட்டது, அவர் 1998-2001 காலகட்டத்தில் திரைப்படச் சான்றிதழின் தணிக்கை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
சக்தி சமந்தா இயக்கிய கட்டி பதங், குல்ஷன் நந்தாவின் அதே தலைப்பில் அதிகம் விற்பனையான நாவலை அடிப்படையாகக் கொண்டது. இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன், சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா ஆகியோரை ஒன்றாகக் கொண்டு வந்ததற்காக இந்த படம் சிறப்பாக நினைவுகூரப்படுகிறது. யே ஷாம் மஸ்தானி, பியார் திவானா ஹோதா ஹை மற்றும் யே ஜோ மொஹபத் ஹை போன்ற எவர்க்ரீன் மெல்லிசை ஹிட் பாடல்களை இந்தப்படம் கொண்டுள்ளது.
**************
SM / PKV / DL
(Release ID: 1879310)
Visitor Counter : 199