தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் ‘திரைப்படத் துறையில் கார்ப்பரேட் கலாச்சாரம்’ பற்றிய உரையாடல் அமர்வு
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இந்தியத் திரையுலகில் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வருகை அதன் நன்மை தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. ஒருபுறம், இது தொழில்துறை முன்பு எதிர்கொண்ட நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வளித்தது, வணிக விளைவு என்னவாக இருந்தாலும் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியத்தை உறுதிசெய்தது. மேலும் தனிப்பட்ட தயாரிப்பாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தது. மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் படங்களில் ஒரு இயக்குனரின் தனித்துவம் காணாமல் போகிறது. படைப்பாற்றலில் சமரசம் செய்யப்படுகிறது. படைப்பாற்றல் மற்றும் வணிகம் இரண்டுமே இணைந்து நியாயமான சமநிலையை பராமரித்தால் மட்டுமே சிறப்பான திரைப்படம் அமையும்.
கோவாவில் இன்று நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘திரைப்படத் துறையில் கார்ப்பரேட் கலாசாரம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடல் அமர்வின் போது, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான அனீஸ் பாஸ்மி இவ்வாறு கூறினார்.
இந்த தலைப்பில் இயக்குனர் விகாஸ் பால் பேசுகையில், திரைப்படம் தயாரிப்பது இதயத்தின் வணிகமாகும். கார்ப்பரேட் கலாச்சாரம் படைப்பாற்றல் மிகுந்த திரைப்படம் உருவாக்கத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். திரைப்பட திருட்டு குறித்து பேசிய விகாஸ் இந்த சவாலான சிக்கலைத் தீர்க்க அரசாங்கமும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்க்க வேண்டும் என்று கூறினார்.
இயக்குனர் அபிஷேக் ஷர்மா கூறுகையில், கார்ப்பரேட்மயமாக்கல் தொழில்துறையில் நேர்வழியிலான பண பயன்பாட்டை உறுதி செய்துள்ளது என்று கூறினார். மேலும், இந்தியத் திரையுலகம் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டால் மட்டுமே உண்மையான ‘தொழில்துறையாக’ மாறும் என்று அவர் கூறினார்.
தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் கூறுகையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், தரமான படங்களைத் தயாரிக்க அதிகப் பணத்தை கொடுத்து வருகின்றன என்று கூறினார். "அதிகமான நிறுவனங்கள் ஈடுபடுவதினால், அதிக படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள்" என்று அவர் கூறினார்.
இந்த அமர்வை பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தா ஒருங்கிணைத்தார்.
**************
PKV / SRI / DL
(Release ID: 1879229)
Visitor Counter : 162