சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சுகாதாரம் & ஆரோக்கியத்தைப் பேண ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மாணவிகள் அதிகம் சாப்பிட வேண்டும் - தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் திருமதி பிரமிளா குமாரி வலியுறுத்தல்

Posted On: 21 NOV 2022 6:31PM by PIB Chennai

சுகாதாரம் & ஆரோக்கியத்தைப் பேண ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மாணவிகள் அதிகம் சாப்பிட வேண்டும் என தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் திருமதி பிரமிளா குமாரி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் - போர்ட்பிளேர், தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா & மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மங்குல்டனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடத்தியது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திருமதி பிரமிளா குமாரி, உடல்நலனையும், மன நலனையும் பேண ஆரோக்கியம் அவசியம் என்பதை மாணவிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வளமான, நலமான இந்தியாவை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார்.

மங்குல்டன் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனி தாஸ் பேசுகையில், தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தார். குறிப்பாக எப்படி கைகளைக் கழுவ வேண்டும் என்பது குறித்த செய்முறையையும்  மாணவ-மாணவிகளிடம் அவர் செய்து காண்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குத்தப்பாரா பஞ்சாயத்து தலைவர் திரு. துர்லவ் தாஸ், வாழ்த்துரை வழங்கினார்.

மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் திரு கே.ஆனந்த பிரபு தலைமை தாங்கிப் பேசினார்.

கள விளம்பர உதவியாளர் திரு எம். முரளி வரவேற்பு ஆற்றினார்.

முன்னதாக மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகளில் வென்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

***************

 

  

 

  




(Release ID: 1877768) Visitor Counter : 117


Read this release in: English