தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் பிரம்மாண்டமான துவக்க விழா, ஒரு பார்வை
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரம்மாண்டமான திரைப்படத் திருவிழாவான இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 53-வது பதிப்பு, திரைப்படங்களைத் திரையிடுவதற்கான தளமாக மட்டுமல்லாமல் நமது எண்ணம் மற்றும் உணர்வுகளையும் தூண்டி எழச் செய்கிறது. விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் உணர்வுக்கு ஏதுவாக “கடந்த 100 ஆண்டுகளில் இந்திய திரைப்படங்களின் வளர்ச்சி” என்ற கருப்பொருளோடு இந்த திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
சர்வதேச திரைப்படங்களுக்கு ஸ்பெயின் நாட்டின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சாராவின் அபரிமிதமான பங்களிப்பைப் போற்றும் வகையில் அவருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார். “ஏராளமான மனங்களைக் கவர்ந்த, அபாரமான நடிப்பாற்றலோடு தெலுங்கு திரைப்படத்துறையில் மிகுந்த புகழ்பெற்றவர், சிரஞ்சீவி”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியா மற்றும் சர்வதேச நடுவர் குழுவினர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவை கடந்த 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இரண்டு முக்கிய நோக்கங்கள் என்று கூறினார். உலகத் தரம் வாய்ந்த பல அம்சங்கள் நிறைந்த மாநாட்டு மையத்தின் கட்டமைப்புப் பணி இறுதி நிலையில் இருப்பதாகவும், 2025-ஆம் ஆண்டிற்குள் புதிய வளாகத்தில் திரைப்படத் திருவிழாவை கொண்டாட இயலும் என்றும் கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அறிவித்தார்.
இந்திய மக்களின் திறமை மற்றும் நமது தொழில்துறை தலைவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக திரைப்பட தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள அனைவரும் விரும்பும் தலமாக நம் நாட்டை உருவாக்கும் தமது தொலைநோக்குப் பார்வையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளிப்படுத்தினார். “பிராந்திய விழாக்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை, குறிப்பாக பிராந்திய திரைப்படங்களை படைப்பாற்றலின் மையமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது திறமை மிக்க இளைஞர்களிடையே உள்ள அபரிமிதமான தொழில்நுட்ப திறமையை மேம்படுத்துவதன் வாயிலாக உலகளவில் இந்தியாவை திரைப்பட தயாரிப்பு மையமாக மாற்ற முடியும்”, என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பை உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படத் திருவிழா வழங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய திரைப்படத் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை அவர் நினைவு கூர்ந்தார். பல்வேறு முன்முயற்சிகளின் மூலம் உலகின் படைப்பாற்றல் மையமாக இந்தியாவை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா வாசித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877594
(Release ID: 1877594)
**************
Sri/RB/KRS
(Release ID: 1877709)
Visitor Counter : 185