சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பவர் கிரிட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநில அளவிலான ஓவியப்போட்டி
Posted On:
15 NOV 2022 6:55PM by PIB Chennai

தேசிய அளவிலான எரிசக்தி பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய மின்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஓவியப்போட்டிக்கு ஏற்பாடு செய்தது. இரண்டு பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. முதல் வகை போட்டி 5,6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. இரண்டாவது பிரிவில் 8,9, மற்றும்10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கான இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஈடுபாடு ஏற்படும். இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக, இணையதளம் வாயிலாக போட்டிகள் நடத்தப்பட்டு 55 ஓவியங்கள் வல்லுனர்கள் குழுவால் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையில் நடைபெற்ற போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இப்போட்டி 14.11.2022 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு வேல்ராஜ் பங்கேற்று நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா 7500 ரூபாயும் வழங்கப்பட்டன.
முதல் பிரிவு போட்டியில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ஹரிணி முதல் பரிசையும், கோவை மாணவி நேஹா இரண்டாவது பரிசையும், தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீஹனு மூன்றாம் பரிசையும் வென்றனர்.
2-வது பிரிவில் சேலத்தைச் சேர்ந்த முகேஷ் முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த நேயா இரண்டாவது பரிசையும், சென்னையைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.


***************
SG/PLM/RS/IDS
(Release ID: 1876212)