விவசாயத்துறை அமைச்சகம்

மத்தியப் பிரதேசம் மொரேனாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி, பயிற்சி முகாம் நிறைவடைந்தது; ஆயிரக்கணக்கான உள்ளூர் விவசாயிகள் பயனடைந்தனர்

Posted On: 13 NOV 2022 6:27PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மத்தியப்பிரதேசம் மொரேனாவில் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான 3 நாள் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் இன்று நிறைவடைந்தது. மூன்றாவது மற்றும் இறுதி நாளான இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்றைய சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வி.டி. ஷர்மா. விழாவுக்கு மத்திய வேளாண் அமைச்சரும், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார். மத்தியப்பிரதேச வேளாண் அமைச்சர் திரு கமல் பட்டேல், உள்ளூர் பொறுப்பு அமைச்சர் திரு பரத் சிங் குஷ்வாகா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு தோமர், இந்தக்கண்காட்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழிகாட்டும் வகையில் பயிற்சிகள் வழங்கி சிறப்பித்த இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ( ஐசிஏஆர்) உள்பட நாடு முழுவதும் உள்ள விவசாய நிறுவனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞானிகளைப் பாராட்டினார். கண்காட்சியில் அரங்குகளை நிர்மாணித்திருந்த பல்வேறு வேளாண் நிறுவனங்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். நமது நாடும், சம்பல் பிராந்தியமும் வேளாண்மையை முக்கிய தொழிலாக கொண்டுள்ளன என்றும், வேளாண்மையை நாம் வலுப்படுத்தினால், நாடும் வளமாகும் என்றும்  அவர் கூறினார். வேளாண் பொருளாதாரத்தில் பெரும் ஆற்றல் உள்ளது என்று கூறிய அமைச்சர், நாட்டில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது, வேளாண்மை துறையே பாதுகாவலாக இருக்கும் என்றார்.

முன்பு, வேளாண்மை சார்ந்த திட்டங்கள் உற்பத்தி சார்ந்ததாக இருந்தன என்றும், தற்போது இன்றைய கொள்கைகள் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகின்றன என்றும் திரு தோமர் கூறினார். விவசாயிகளின் வருமானம் இருமடங்காக அதிகரிக்ககப்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதிலிருந்து, மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தத் திசையில் பயணித்து வருகின்றனர்.

வேளாண்மைக்கு ஆகும் செலவைக்குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர் கூறினார். உற்பத்தி பொருட்களின் தரமும் மிகவும் உயர்தரத்துடன் இருப்பது அவசியமாகும். விவசாயத்துக்கு ஆகும் தண்ணீர் செலவு குறைக்கப்பட்டு, நுண்ணீர் பாசனத்துக்கு மாற வேண்டும். யூரியா, டிஏபி உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். உயிரி உரம், நானோ யூரியா பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். பசுஞ்சாணம் மற்றும் சிறுநீரிலிருந்து நாம் உரத்தைத் தயாரித்தால், செலவு குறைவதுடன், ஆரோக்கியத்துக்கும் நல்லது என்று திரு தோமர் கூறினார். நாட்டில் 86 சதவீத சிறு விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ரூ.6,865 கோடி முதலீட்டில் 10,000 புதிய விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக திரு தோமர் தெரிவித்தார்.

******

MSV/PKV/DL



(Release ID: 1875676) Visitor Counter : 106


Read this release in: English , Urdu , Hindi