ஜல்சக்தி அமைச்சகம்

கங்கா உத்சவ் என்ற பெயரில் நதிகள் திருவிழா 2022 நவம்பர் 4 ஆம் தேதி தில்லியில் கொண்டாடப்படவுள்ளது


மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்கின்றனர்

Posted On: 03 NOV 2022 5:15PM by PIB Chennai

கங்கா உத்சவ் என்ற பெயரில் நதிகள் திருவிழா 2022 நவம்பர் 4 ஆம் தேதி தில்லியில் கொண்டாடப்படவுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் சார்பில்  மேஜர் தயான்சந்த் அரங்கத்தில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் காலை அமர்வில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.  இதில் மத்திய ஜல்ஜக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு-வும் கலந்துகொள்கிறார்.

மாலை அமர்வுக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு  கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகிக்கவுள்ளார்.  இதில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் செயலாளர் திரு பங்கஜ் குமார் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

கங்கை உத்சவ் நதி திருவிழா 2022 –ன் மூலம் நதிகள் புனரமைப்பில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பை தேசிய தூய்மை கங்கை இயக்கம் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது.  நதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நதிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் கங்கை உத்சவ் 2022 கொண்டாடப்படுகிறது.

கங்கை உத்சவ் 2022-ல் மத்திய –மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறும்.  கங்கை தூய்மைக்காக அதிக நிதி வழங்கியவர்கள், ஜல்சக்தித் துறை அமைச்சரால் கவுரவிக்கப்படுவார்கள்.  நதிகள் உடனான இணைப்பை வலுப்படுத்த ஆர்த் கங்கா திட்டத்தில்  கவனம் செலுத்தப்படும்.  கங்கை உத்சவ் நிகழ்ச்சியில் மாவட்ட கங்கை குழுக்கள் தீவிரமாக பங்கேற்பது உறுதி செய்யப்படும். 

கங்கை உத்சவ் 2022 –ன் ஒரு பகுதியாக சிறிய உணவுத் திருவிழாவும் நடைபெறும்.  நதிகள் தூய்மை தொடர்பான படம் திரையிடல் மற்றும் தகவல் விளக்க அமர்வும் இடம்பெறும்.  கலை, கலாச்சாரம், கதை சொல்லல், கலந்துரையாடல், இசை, நடனம் உள்ளிட்டவற்றின் கலவையாக இந்த கங்கை உத்சவ் நடைபெறவுள்ளது.  இந்த திருவிழா நடைபெறும் அதே நேரத்தில் நாடுமுழுவதும் கங்கை நதிக்கரைகள் உள்ள 75 இடங்களிலும் இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2017 ஆம் ஆண்டு சிறிய அளவில் கொண்டாடப்பட்ட கங்கை உத்சவ் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  2020 ஆம் ஆண்டு 3 நாள் விழாவாக இது காணொலி வாயிலாக நடைபெற்றது.

**************

SM/PLM/PK/IDS(Release ID: 1873540) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Hindi