சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கம்பிவட முறையில் மேற்கொள்ளப்பட்டபரிசோதனை மூலம் தொழிலாளர் பற்றாக்குறை, பயிர்களைக் கையாளும்போது ஏற்படும் பயிர்ச்சேதம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது
Posted On:
02 NOV 2022 2:07PM by PIB Chennai

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் தனித்துவமான, ஆற்றல்மிக்க, சிக்கனமான வேளாண் போக்குவரத்து சாதனத்தைசென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
இலகுரக மோனோரயில் போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண் விளைபொருட்களை அருகில் உள்ள சேகரிப்பு மையங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும். ஐஐடி மெட்ராஸ் குழுவினர், வேளாண் விவசாயிகளுக்கான அரசுசாரா நிறுவனமான பொது விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பண்ணையில் முன்வடிவ கம்பிவட சாதனத்தை (prototype cableway system) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளனர்.
விவசாயப் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை இருந்துவருவது இந்திய வேளாண் நடைமுறையை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். குறிப்பாக அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் வேளாண் விளைபொருட்களை (கரும்பு, வாழைத்தார் அல்லது நெல் போன்றவை) வயலில் இருந்து அருகில் உள்ள சேகரிப்பு மையத்திற்குக் கொண்டு செல்ல அதிகளவில் ஆட்கள் தேவைப்படும்போது இந்தப் பிரச்சனை மேலும் கடினமாக இருக்கும். குறிப்பாக தண்ணீர் தேங்கியுள்ள நன்செய் நிலங்களை தொழிலாளர்கள் தலைச்சுமையாகக் கடக்க வேண்டியிருப்பதால் அங்கு இப்பிரச்சனை மிகக் கடினமாக இருந்து வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், ஐஐடி மெட்ராஸ் இயந்திரவியல் துறை பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை, விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்துஇந்த சிக்கனமான, எளிமையான போக்குவரத்து சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தப் போக்குவரத்து சாதனத்தின் பிரத்யேக அம்சங்களை விளக்கிய இயந்திரவியல் துறை பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை,"வரவிருக்கும் ஆண்டுகளில், குறிப்பாக அறுவடைக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள கடுமையான ஆள்பற்றாக்குறையை இந்திய விவசாயிகள் சந்திக்க நேரிடும். இலகுரக தொங்குரயில் கருத்துரு அடிப்படையில் உள்ளூர் பட்டறைகளில், தங்கள் பகுதியில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டுஎளிய முறையில் வேளாண் போக்குவரத்துசாதனத்தை உருவாக்க முடியும். இந்தியப் பண்ணைகளில் இதனை எளிதாக நிறுவி, விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் தொழிலாளர்களின் தேவையைக் குறைக்கலாம். தரைக்கு மேலே இந்த சாதனம் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இடையூறுகளும் மிகக் குறைவாகவே இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பண்ணைகளுக்கு ஏற்ற வகையில் இந்த போக்குவரத்து சாதனத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கிய பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை,"திட்டமிடப்பட்டு உள்ள இந்த வேளாண் சாதனம் மிக எளிதான வடிவமைப்பு கருத்துருவையும், உதிரிபாகங்களையும் கொண்டதாகும். எந்தவொரு உள்ளூர்ப் பண்ணைகளிலும் இதனை எளிதாகச் செயல்படுத்தலாம். தண்டவாள அமைப்பிலான கம்பிகளையோ, கம்பங்களையோ கூடுதலாகச் சேர்த்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரம்பை எளிதாகநீட்டித்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், சூரியஒளி மின்சக்தியில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பவர்பேக் மூலம் டிராலிகளை இயக்க முடியும்" என்றார்.
திட்டமிடப்பட்டுள்ள போக்குவரத்து சாதனத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
வேளாண் பணிகளில் உள்ள மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு எளிதான, குறைந்த செலவில் தீர்வு கிடைக்கிறது. வேளாண் விளைபொருட்களை சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல, வழக்கமான முறையில் தலைச்சுமையாக தூக்கிச் செல்லும்போது, சிறிய பண்ணையில் நாள் ஒன்றுக்கு 32 பேரைப் பணிக்கு அமர்த்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், புதிய போக்குவரத்து சாதனத்தை ஈடுபடுத்தும்போது இதே வேலையைச் செய்வதற்கான விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 நபர்களாகக் குறைந்துவிடும்.
சேகரிப்பு மையங்களுக்கு தலைச்சுமையாக விளைபொருட்களை குறிப்பாக பழங்களை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதங்களைத் (bruising of fruits) தவிர்க்க இந்த போக்குவரத்து சாதனம் உதவுகிறது. உதாரணமாக, வாழைப் பழங்களை சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லும்போது அடிபட்டு சேதம் ஏற்படுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக கணிசமான இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் போக்குவரத்து சாதனத்தை நிறுவ குறைந்த அளவு இடம் மட்டுமே தேவைப்படுகிறது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இயக்கப்படுவதால் பயிர்களுக்கும் இடையூறு இருக்காது. எனவே இந்தப் போக்குவரத்து சாதனத்தைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலில் மிகக் குறைந்த அளவே தாக்கம் ஏற்படுகிறது.
ரயில்தண்டவாள அமைப்பில் இயக்கப்படுவதால் வழக்கத்தைவிட இதில் எரிசக்திப் பயன்பாடு குறைவு. இதனை இயக்க இரு முனைக்கும் தலா ஒருவர் என இரண்டுபேர் இருந்தாலே போதுமானது. எனவே இப்போக்குவரத்து சாதனத்தை இயக்குவதற்கான செலவு குறைவாகவே இருக்கும்.
செயல்விளக்கம்
இந்தப் போக்குவரத்து சாதனம் பண்ணையோர நெடுகிலும் கான்கிரீட் அடிப்பகுதியுடன் கூடிய இரும்புக் கம்பங்களை (steel posts erected on concrete shoes) நடும்எளிய உள்நாட்டு வடிவமைப்பைக் கொண்டதாகும். 6 மீட்டர்கள் இடைவெளியுடன் இந்த கம்பங்கள், வலிமையுடன் கூடிய இலகுரக தண்டவாள அமைப்பு மூலம் இணைக்கப்படும். பெட்ரோல் என்ஜினைக் கொண்டு முன்னும் பின்னும் இயக்கப்படும் இழுவை அலகு மூலம் வேளாண் விளைபொருட்கள் ஏற்றிச் செல்லப்படும். ஒவ்வொரு டிராலியும் ஏறத்தாழ 40 கிலோ எடைகொண்ட பொருளை அதாவது தலைச்சுமையாகக் கொண்டு செல்லும் அளவுக்கு ஏற்றிச் செல்லக் கூடியவை. தண்டவாள அமைப்பை அவ்வப்போது தேவைப்படும் தூரத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகலாம். இதற்குத் தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கும் என்பதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பட்டறைகளிலேயே உபகரணங்களைத் தயாரிக்க முடியும்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில், பொது விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.என்.சிவசுப்பிரமணியத்தின் விவசாய நிலத்தில் இந்தப் போக்குவரத்து சாதனம் நிறுவப்பட்டது. சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் இந்த சாதனம் நிறுவப்பட்டு உள்ளது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்த போக்குவரத்து சாதனம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்கிய திரு. சிவசுப்பிரமணியன்,"குறிப்பாக ஆற்றங்கரையோரப் பகுதிகளில் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த வேளாண் போக்குவரத்து சாதனம் பயனளிப்பதாக இருக்கும். உதாரணமாக, கரூர் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் கால்வாய்கள் மூலம் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன. இதனால், அங்குள்ள நன்செய் நிலங்களின் வழியாக விளைபொருட்களைத் தொழிலாளர்கள் கொண்டுசெல்வது என்பது மிகமிகக் கடினமானதாகும். இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண இந்த வேளாண் போக்குவரத்து சாதனம் உதவிகரமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஜூலை 2020 முதல் தொடர்ச்சியாக பல மாதங்களாகப் பரிசோதனைகளைமேற்கொண்டனர். சுமை ஏற்றப்பட்ட ஐந்து டிராலிகளுடன் 200 மீட்டர் தூரத்திற்கு சோதனைகள் நடைபெற்றன. இந்த சாதனத்தை இயக்க இரு முனைகளிலும் தலா ஒருவர் தேவைப்பட்டனர். வேளாண் சுமைகளை தொடர்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் ஏற்றிச் செல்ல முடியும் என இப்பரிசோதனை எடுத்துக் காட்டுகிறது. கம்பிவடத்திற்கான உபகரணங்களை உள்ளூர் பட்டறைகளிலேயே தயாரித்து, முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாக இந்த சாதனத்தை உருவாக்க முடியும்.

***************
(Release ID: 1872991)