அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்தித்தார்
Posted On:
12 OCT 2022 6:00PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், விண்வெளி, அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பல்வேறு மத்திய திட்டங்கள் பற்றிய நிலைமை குறித்து, இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக மாணவிகள் இடையே அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புக்கான வழிமுறைகள் பற்றியும் அமைச்சர் விவாதித்தார்.
அறிவியல் ஆராய்ச்சியில் கூடுதலாக மாணவிகளை ஊக்கப்படுத்துவதன் அவசியம் பற்றி ஹைதராபாதில் நடைபெற்ற சிஎஸ்ஐஆர்-ஐஐசிடி சார்பிலான மாநாட்டில், டாக்டர் சவுந்தரராஜன் தமது உரையில் வலியுறுத்தியதை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்க சிஎஸ்ஐஆர் மையமும், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும் அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
தென்மாநிலங்களில் குறிப்பாக ஹைதராபாத், பெங்களுரு ஆகிய முன்னணி மையங்களில் இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்துவதற்கும் பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புத்தொழில்களில் பங்களிப்பு குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் விவாதித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள தனி அதிகாரம் உள்ள நிதியை கொண்டு உதவி தேவைப்படும் நபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நடத்தும் பிரஜா தர்பார் திட்டத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
**************
(Release ID: 1867266)
Visitor Counter : 158