குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுகாதாரத்துறையில் பெருமளவுக்கு பொதுத்துறை- தனியார்துறை பங்கேற்பு இருக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்
Posted On:
11 OCT 2022 4:41PM by PIB Chennai
நாட்டில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டாண்மை அவசியம் என்றும் கூட்டு முயற்சி தேவை என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் கனவை நனவாக்க பெரும் கூட்டு முயற்சி அவசியம் என அவர் கூறியுள்ளார்.
‘சுகாதார சேவை மாற்றம்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோல்’ என்னும் கருப்பொருளுடன், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக சுகாதார தொழில் அமைப்பு, வர்த்தக நிறுவனங்கள், பிஃக்கி ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்தார்.
'ஹீல் இன் இந்தியா' முன்முயற்சியின் மூலம் இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் முன்முயற்சியைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், 'முதன்மை சுகாதார சுற்றுலா தலமாக' மாற்ற, இந்தியாவின் திறனைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு திரு தன்கர் கேட்டுக்கொண்டார்.
கொவிட் தொற்றுநோய் தொடர்பான இந்தியாவின் அனுபவத்தை நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இந்தியா தனது குடிமக்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட்டதுடன் மட்டுமல்லாமல், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத் துறையின் அயராத முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், 1990 முதல், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளது என்றும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டில் ஏழைகள் மற்றும் செல்வந்தர்களுக்கு இடையிலான சுகாதார சேவைகளை அணுகுவதில் காணப்பட்ட இடைவெளியை வெகுவாக குறைத்துள்ளது என்று திரு தன்கர் கூறினார்.
பிஃக்கி அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி, பிஃக்கி சுகாதார சேவைகள் குழு தலைவர் திரு கௌதம் கன்னா, பிஃக்கி தலைமை இயக்குனர் திரு அருண் சாவ்லா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
**************
PKV/AG/IDS/SM
(Release ID: 1866885)
Visitor Counter : 203