சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

Posted On: 21 JUL 2022 3:14PM by PIB Chennai

முஸ்லீம்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயப் பிரிவினரின் நல்வாழ்விற்காகவும் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு பிரதமர் மக்கள் ஆரோக்கியத் திட்டம், கிசான் சம்மான் நிதி திட்டம், மின்சார திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த சிறுபான்மையினர் வேலைவாய்ப்பிலும், கல்வி நிலையங்களிலும் 10 சதவிகித ஒதுக்கீட்டைப் பெறலாம்.  

முஸ்லீம்களையும் உள்ளடக்கிய சிறுபான்மையினரில் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.  அந்தத் திட்டங்களின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

அ. கல்வி அதிகாரம் பெறுவதற்கான திட்டங்கள்: மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரிடையாக பணம் செலுத்தும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உயர்கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்ற சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் பெறுகின்ற கல்வி கடன்களுக்கு வட்டி மானியம் தரப்படுகின்றது.  யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் தொடக்கநிலை தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆ.  வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள்: 14-35 வயதுப்பிரிவிலான இளைஞர்களுக்கு கற்றல் மற்றும் ஈதல்  என்ற தொழில்திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  வேலைவாய்ப்பிற்காக கைவினைக் கலைஞர்களின் உற்பத்திப் பொருளுக்கான சந்தையை ஏற்படுத்தித் தரும் வகையிலும் நாடு முழுவதும் ஹுனர்ஹாட் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினத்தைச் சார்ந்த மகளிரின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக நை ரோஷினி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

இ. உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டங்கள்: பிரதம மந்திரி ஜன்விகாஸ் காரிய கிரம் என்ற திட்டம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 49 பட்ட வகுப்புக் கல்லூரிகள், 179 உண்டு உறைவிடப் பள்ளிகள் 3016 பள்ளிக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள திட்டங்களின் விவரங்களை சிறுபான்மையினர் உறவுகள் அமைச்சகத்தின் www.minorityaffairs.gov.in என்ற வலைத்தளத்தில் காணலாம்.

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் உறவுகள் அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

******

 



(Release ID: 1866756) Visitor Counter : 128


Read this release in: English , Urdu