பாதுகாப்பு அமைச்சகம்
இளைஞர்கள் ஒன்றிணைந்து போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: பாதுகாப்பு துறை அமைச்சர் அழைப்பு
Posted On:
12 SEP 2022 6:39PM by PIB Chennai
இந்தியாவின் முழு திறனை எட்டுவதற்கு தடையாக இருக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலுக்கு எதிராக தேசம், குறிப்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார். புதுதில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனையும் அடைவதை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று என மத்திய அமைச்சர் தெரிவித்தார். அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இருக்க முடியவில்லை. அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம் என்று தெரிவித்த அவர், அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும் என கவலை தெரிவித்தார். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்ட்த்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டுமென அறைகூவல் விடுத்தார். மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும் என்றார். ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர் போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்களில் இருந்து காணொலி காட்சி வழியாக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858763
(Release ID: 1858783)
Visitor Counter : 261