தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இஎஸ்ஐசி-யின் 188வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ பராமரிப்பு மற்றும் சேவை வழங்கல் முறையை அதிகரிப்பதற்கான முக்கிய முடிவுகள்


சென்னையில் உள்ள ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் அணு மருத்துவத் துறைகள் நிறுவப்படும்

Posted On: 19 JUN 2022 3:38PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில், இன்று நடைபெற்ற தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின்  188வது கூட்டத்தில், நாடு முழுவதும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சேவை வழங்கல் முறையை அதிகரிக்க குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படும் என இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இஎஸ்ஐ திட்டம் 443 மாவட்டங்களில் முழுமையாகவும், 153 மாவட்டங்களில் பகுதியளவும் செயல்படுத்தப்படுகிறது, அதேசமயம் 148 மாவட்டங்கள் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் வரவில்லை. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாடு முழுவதும் உள்ள பகுதியளவில் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படாத மாவட்டங்கள் முழுமையாக உள்ளடக்கப்படும். ஆயுஷ்மான் பாரத் மற்றும் டை-அப் மருத்துவமனைகள் மூலம் புதிய வசதிகளை நிறுவுவதன் மூலம் மருத்துவ பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும்.

 

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர், சதாரா, பென், ஜல்கான், சக்கன் மற்றும் பன்வெல் ஆகிய இடங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகள்; ஹரியானாவில் ஹிசார், சோனேபட், அம்பாலா மற்றும் ரோஹடக் ஆகிய இடங்களில் உள்ள நான்கு மருத்துவமனைகள்; தமிழ்நாட்டில் இரண்டு மருத்துவமனைகள் (செங்கல்பட்டு மற்றும் ஈரோடு) உள்பட இஎஸ்ஐ கழகம் நாடு முழுவதும் 23 புதிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனைகள் தவிர, 62 இடங்களில் 5 மருத்துவர்களுக்கான மருந்தகங்களும் திறக்கப்படும். இந்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் தரமான மருத்துவ சேவையை வழங்குவதை உறுதிசெய்வதோடு வாடிக்கையாளர்களின் திருப்தியையும் அதிகரிக்கும்.

 

ஹெல்த் கேர் துறைகளில் வளர்ந்து வரும் திறமையான மனிதவளத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், திறமையான மனிதவளத்தின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் வகையில், இஎஸ்ஐ ஃபரிதாபாத், சனத்நகர் (ஹைதராபாத்), சென்னை கே.கே.நகர் ஆகிய  மூன்று மருத்துவக் கல்லூரிகளில் 10 பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளைத் தொடங்க உள்ளது.

தரமான மருத்துவ சேவையை வழங்க, புதிய மருத்துவமனைகளை அமைப்பதன் மூலமும், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துவதன் மூலமும் அதன் உள்கட்டமைப்பைப் பெருக்கி வருகிறது.

மத்திய தொழிலாளர் அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், கடந்த 8 மாதங்களில் 2000-க்கும் மேற்பட்ட டாக்டர்கள்/ஆசிரியர்களை உள்ளடக்கிய பல்வேறு பணிகளுக்கான 6400 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

 

சனத்நகர், ஃபரிதாபாத் மற்றும் சென்னையில் உள்ள மூன்று இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் அணு மருத்துவத் துறைகள் நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் இதுபோன்ற சேவைகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

 

புனேவில் உள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை மேம்படுத்துவதன் மூலம் புனேவில் உள்ள 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

 

கூட்டத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் 100 படுக்கைகள் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனையை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை அனைத்து நவீன சுகாதார வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.

***************



(Release ID: 1835337) Visitor Counter : 275


Read this release in: English , Urdu , Hindi , Marathi