பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமரின் பங்கேற்பு

Posted On: 24 MAY 2022 2:23PM by PIB Chennai

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவோரில் ஒருவராக 2022 மே 24 அன்று பிரதமர்  திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இவருடன் ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

சுதந்திரமான, வெளிப்படையான, உட்படுத்திய இந்தியா–பசிஃபிக் பிராந்தியத்திற்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்சனைகளில் அமைதியான தீர்வு ஆகிய கோட்பாடுகள் கடைப்பிடிக்கபடுவதையும்  இந்தத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

பகைமை போக்குகளை ஒழித்தல், பேச்சுவார்த்தை மற்றும்  தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றின் அவசியம் குறித்த இந்தியாவின் தொடர்ச்சியான கோட்பாடு ரீதியான நிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றை முறியடிப்பதற்கான முயற்சிகள் பற்றி  ஆய்வு செய்த குவாட் தலைவர்கள், இந்தியாவில் உள்ள உயிரியல் ஆய்வு திறன் விரிவடைந்திருப்பதை வரவேற்றனர். மேலும் தடுப்பூசிகள் வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுப் பட்டியல் அனுமதியை விரைந்து வழங்க அவர்கள் அழைப்பு விடுத்தனர். குவாட் தடுப்பூசி பங்கேற்பு திட்டத்தின் கீழ் 2022 ஏப்ரலில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் 5,25,000 டோஸ்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டதை இந்தத் தலைவர்கள் வரவேற்றனர்.

நம்பகமான உலகளாவிய வழங்கல் தொடரைக் கட்டமைப்பதற்கு மகத்தான குவாட் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்த பிரதமர் இந்தியாவில் செமிகண்டக்டர் சூழலை உருவாக்குவதற்கான தேசிய கட்டமைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பது பற்றியும் பேசினார்.

இந்த பிராந்தியத்திற்கு ஆக்கப்பூர்வமான செயல்திட்டத்தை குவாட் வழங்க பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார். தங்களின் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனையை தொடர ஒப்புக்கொண்ட தலைவர்கள் 2023-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த உச்சிமாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினர்.

***************



(Release ID: 1827995) Visitor Counter : 245