பாதுகாப்பு அமைச்சகம்
தில்லி கண்டோன்மென்ட்டில் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்டல் மையத்திற்காக புதிய பிஏஓ வளாகம்
Posted On:
09 MAY 2022 6:04PM by PIB Chennai
ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட் மையத்திற்கான ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகத்தின் (பிஏஓ) புதிய அலுவலகக் கட்டிடத்தை தில்லி கண்டோன்மெண்டில் தில்லி பகுதியின் தலைமை அதிகாரி லெஃப்டினென்ட் ஜெனரல் வி கே மிஷ்ரா முன்னிலையில் பாதுகாப்புத் துறை கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு ரஜ்னிஷ் குமார் இன்று திறந்து வைத்தார்.
பாதுகாப்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் (மேற்கு) திரு தேவி ராம் நேகி, பாதுகாப்புக் கணக்குத் துறை மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளரின் (மேற்கு) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த அலுவலகம், இந்திய ராணுவத்தின் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் கீழ் உள்ள பணியிடங்களுக்கான 23,500-க்கும் மேற்பட்ட தனிநபர் கணக்குகளை கையாளுகிறது. மாதத்திற்கு சுமார் 160 கோடி ரூபாயை இந்த அலுவலகம் பட்டுவாடா செய்கிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரஜ்னிஷ் குமார், நிதி ஆலோசனை, பணம் செலுத்துதல், கணக்கியல் மற்றும் உள் தணிக்கை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பாதுகாப்புக் கணக்குத் துறையின் முழுமையான செயல்முறைக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். மனிதாபிமான அணுகுமுறையுடன் நிதி நிர்வாகத்தை நோக்கி நகருமாறு துறையை அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு விரைவாக பணம் செலுத்துவதற்கும், தற்சார்பு இந்தியா மற்றும் திறன்மிகு ஊதிய முறைக்கு இந்திய பாதுகாப்புத் துறைக்கு உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்ட பிரபால் போன்ற பல்வேறு முயற்சிகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823941
-----
(Release ID: 1823983)