பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை துரிதமாக மேம்படுத்த, தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்திறனை வலுப்படுத்துங்கள்: எல்லை சாலைகள் அமைப்பு அதிகாரிகளிடம் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
Posted On:
07 MAY 2022 12:58PM by PIB Chennai
தொழில்நுட்பத்தின் சீரிய பயன்பாட்டின் மூலம் தனது செயல்திறனை வலுப்படுத்தி, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று எல்லை சாலைகள் அமைப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைப்பின் 63-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுவதற்காக புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் எல்லை சாலைகள் அமைப்பின் அதிகாரிகளிடம் அவர் உரையாற்றினார். மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட், ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார், எல்லை சாலைகளின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி, எல்லை சாலைகள் அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏராளமானோர் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர்.
“அண்மைக் காலங்களில், வட பகுதிகளில் சீன வருகை அதிகரித்துள்ளது. மலைப்பகுதிகளில் தங்களது சிறந்த கட்டமைக்கும் திறமைகளால் வெவ்வேறு பகுதிகளை விரைவாக அவர்கள் சென்றடைகிறார்கள். தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, எல்லை சாலைகள் அமைப்பு, அவர்களுக்கு இணையாக தொடர்ந்து பணியாற்றி, தங்களது திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்”, என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இதற்காக, இந்த அமைப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டில் அரசின் உறுதித்தன்மையை வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், 2022-23 நிதிநிலை அறிக்கையில் எல்லை சாலைகள் அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன நிதி 40% உயர்த்தப்பட்டு, ரூ. 3500 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு உத்தியில் மக்களின் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அமைச்சர், “எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் அதிகாரமளிப்பதன் மூலம் அந்தப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்த கூடுதல் விழிப்புணர்வை அவர்கள் பெறுவார்கள். குடிமக்கள் தான் நாட்டின் மாபெரும் சக்தி. எனவே மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, நமது எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டை நோக்கி நகர்வதில் நாம் உறுதி பூண்டுள்ளோம். நம் பாதுகாப்பிற்காக நாள் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களுக்கு அதிகபட்ச வசதிகளை ஏற்படுத்தித் தருவதுதான் நமது முதல் முன்னுரிமை”, என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 2 மென்பொருள்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் 63-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, சாகச பயணம், அனைத்து மகளிர் மின்சார வாகன பேரணி முதலியவற்றையும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823456
****
(Release ID: 1823467)
Visitor Counter : 248